அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் சின்னசாமி மாற்றம் ஏன்? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் டிடிவி தினகரன் அணிக்கு தாவுகிறாரா?
அண்ணா தொழிற்சங்கப் பேரவை, அதிமுக.வின் கிளை அமைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைப்பு! இந்த அமைப்பின் செயலாளராக சிங்காநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆர்.சின்னசாமி செயல்பட்டு வந்தார். அவரை, பிப்ரவரி 2-ம் தேதி மாலையில் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்து அதிமுக.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.சின்னசாமி விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக, அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பொறுப்புக்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, பேரவையின் பணிகளை கவனிக்க புதிய குழு அமைக்கப்படுகிறது.
இக்குழுவில் கோவை மாவட்ட முன்னாள் எம்.பி.யான யு.ஆர்.கிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க பேரவைத் தலைவர் தாடி ம.ராசு மற்றும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளர் கா.சங்கரதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொழிற்சங்கத்தினர் முழு ஒத்துழைப்பு தரவேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்ணா தொழிற்சங்கத்தைப் பொறுத்தவரை தாடி ம.ராசு, சின்னச்சாமி ஆகியோர் தனித்தனி அணிகளாக இயங்கினர். அண்மையில் நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் சின்னச்சாமியும், பேரவையின் பொருளாளர் பழனியும் கலந்து கொண்டனர். பேரவையின் தலைவரான தாடி ம.ராசு, தமிழர் பேரவை தொழிற்சங்கம் என்ற பெயரில் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.
சின்னசாமி முழுக்க தனது கட்டுப்பாட்டில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை இருப்பதாக காட்டிக்கொண்டாலும், வேலை நிறுத்தத்தின்போது அவரால் அதிகமான தொழிலாளர்களை பணிக்கு வரச்செய்ய முடியவில்லை. இது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
சின்னசாமி, ஆரம்பத்தில் காங்கிரஸ் தொழிற்சங்கத்தில் இருந்தவர்! 2006-ம் ஆண்டு காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி.யுடன் கூட்டணி அமைத்த ஜெயலலிதா, 2 தொகுதிகளை அந்த அமைப்புக்கு ஒதுக்கினார். அப்போது சிங்காநல்லூரில் இரட்டை இலை சின்னத்தில் நின்ற சின்னசாமி மட்டுமே ஜெயித்தார். பிறகு அவர் அதிமுக.வில் தன்னை இணைத்துக் கொண்டு, அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பொறுப்பையும் பிடித்தார்.
எத்தனையோ நிர்வாகிகளை அடிக்கடி மாற்றிய ஜெயலலிதா, ஆர்.சின்னசாமியை பல வருடங்களாக அந்தப் பொறுப்பில் நீடிக்க செய்தார். தற்போது டிடிவி அணிக்கு சென்றவர்களைத் தவிர, வேறு யாரையும் பொறுப்பில் இருந்து நீக்காத இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு, முதல்முறையாக ஒரு அணியின் செயலாளரான சின்னசாமியை பொறுப்பில் இருந்து தூக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது சின்னசாமியின் செயல்பாடு சரியில்லாததே நீக்கத்திற்கு காரணம் என கூறப்பட்டாலும், டிடிவி தினகரன் பக்கம் சின்னசாமியின் பார்வை திரும்பியதும் இந்த நடவடிக்கைக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. ஆனாலும் சின்னசாமியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு இன்னும் நீக்கவில்லை.
சின்னசாமி எந்த நேரத்திலும் டிடிவி தினகரனை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரத்தில் கூறுகின்றனர்.