ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அவர் வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்.
ஜெயலலிதா மறைந்ததையொட்டி அவர் வெற்றிப் பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிளவுப்பட்ட இரு அதிமுக அணிகள் சார்பாக இ.மதுசூதணன், டிடிவி.தினகரன் ஆகியோர் போட்டியிட்டனர். திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்பட பலர் போட்டியிட்டனர்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது. இப்போது மீண்டும் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் இ.மதுசூதணன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். பாஜக சார்பில் வேட்பாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது.
கடந்த முறை போட்டியிட்ட கங்கை அமரன், உடல் நலமில்லாததால் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். வேட்பாளரை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. தேர்தலில் நிச்சயம் போட்டியிட்டாக வேண்டும். அதே நேரத்தில் வலுவான வேட்பாளராக இருக்க வேண்டும் என்று கட்சி தலைமை விரும்பியது. மாநில தலைவர் தமிழிசை போட்டியிடுவார் என்று பரவலாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர். இவர் கட்சியில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் நாடார் சமுதாய வாக்காளர்கள் கணிசமாக உள்ளனர். அவர்கள் வாக்குகளைப் பெறவே நாடார் சமுகத்தைச் சேர்ந்த கரு.நாகராஜனை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது. இவர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மீட்பு குழு தலைவர் ராமசந்திர ஆதித்தனுடன் இணைந்து செயல்பட்டவர்.
சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி ஆரம்பித்த போது, கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். 2016ம் ஆண்டு பிஜேபியில் கட்சியில் இணைந்தவர்.