ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தொடர்பான புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் அதிகாரம் காவல்துறைக்கே உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடைபெற இருந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தரபட்டது தொடர்பாக புகாரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் மற்றும் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. எனினும் வழக்கு பதிவு செய்ய தமிழக தேர்தல் அதிகாரி மற்றும் தொகுதி தேர்தல் அதிகாரி நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் வைரகண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதமே முதல் தகவல் அறிக்கை ( FIR ) போடப்பட்டுள்ளதாகவும், ஆனால் முதல் தகவல் அறிக்கை யில் (FIR) யார் மீது வழக்குப்பதிவு என்று குறிப்பிடப்படவில்லை, அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளதாகவும், மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதனையடுத்து, யார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள் என்பதை ஏன் குறிப்பிடவில்லை , மேலும் சில குறிப்புகளை ஏன் நிரப்பவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். மேலும் எதனடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினார்.
அப்போது காவல் துறை தரப்பில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, ஆர்.கே. நகர் தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக வைரக்கண்ணன் வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘தங்கள் தரப்பில் பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால அந்த புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் அதிகாரம் காவல்துறைக்கே உள்ளது.
மேலும் இந்த வழக்கில குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டியது சென்னை காவல் ஆணையரின் பொறுப்பாகும், அதில் தலையிட தங்களுக்கு அதிகாரம் இல்லை’ எனவும் கூறியுள்ளார். ஆனால் , காவல்துறை விசாரணையில் தலையிடாமல் தாங்களும் இந்த விவகாரம் தொடர்பாக கண்காணித்து, பின் தொடருவதாகவும் தன் பதில் மனுவில் கூறியுள்ளார். அதாவது, முதல்வர் உள்ளிட்டவர்கள் மீது ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும், அது தொடர்பாக மாநில போலீஸே விசாரிக்கும் என்பதுதான் ராஜேஷ் லக்கானி பதிலின் சாராம்சம்.
இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரியின் பதில் மனு திருப்திகரமாக இல்லை என்று கூறி, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறி மனுதாரர் வைரக்கண்ணன் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.