கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (செப்.17) மாலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “பிரதமரின் பிறந்த நாளில் விஸ்வகர்மா என்ற பெயரில் 18 வயதை எட்டியுள்ள இளைஞர்களுக்கு, தந்தைவழி தொழில் செய்வதற்கு கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
ராஜாஜியின் அரை நாள் பள்ளி, பின்னர் தந்தை செய்யும் தொழிலில் பயிற்சி என்ற திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி அப்போது எதிர்த்தது.
அப்போது, காங்கிரஸ் முதல்வர் ராஜாஜியின் திட்டத்தை அன்று காமராஜரே எதிர்த்தார். சொந்த கட்சியில் இருந்து எதிர்ப்பு வந்ததால் ராஜாஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜாஜி கொண்டு வந்த அவரது கல்வி திட்டத்திற்கு எவ்விதமான பெயரும் சூட்டவில்லை. நாங்கள்தான் அதனை குலக்கல்வித் திட்டம் என குறிப்பிட்டோம்.
ராஜாஜியின் அதே குலக் கல்வி திட்டத்தை தான் மோடி கொண்டுவந்துள்ளார். விஸ்வகர்ம இளைஞர்கள் 18 வயதை கடந்த பின்பு சுய தொழில் செய்ய வங்கி கடன் திட்டம் என்பது அந்த சமுக இளைஞர்களின் கல்லூரி மற்றும் உயர் கல்வி திட்டத்தை தடுக்கும்.
அந்தச் சமுகம் முன்னேறடைய தந்தை செய்யும் தொழிலுக்கு கடன் உதவி என்பது தான் சரியான திட்டமாக இருந்திருக்கும். சனாதன மாநாட்டை நீதிமன்றம் சென்று தடுக்காது. அந்த மாநாட்டில் இளைஞர் நல அமைச்சர் உதயநிதி பேசியதில் எந்த தவறும் இல்லை.
தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதியை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வரும் சூழலில் சொல்லாத வாக்குறுதியான காலை நேர உணவு என்பது மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.
தெலங்கானா மாநில அதிகாரிகள் தமிழகத்தில் செயல்படுத்தும் காலை உணவு திட்டத்தை பார்த்து சென்று அவர்கள் மாநிலத்தில் ஆரம்ப பள்ளி முதல் உயர் நிலை வகுப்புகள் வரை உயர்த்தி இருக்கின்றனர்.
தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை பற்றி பேசும் தமிழிசை மோடி சொன்ன ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்போம் என்றாரே? அந்தத் திட்டத்தை நிறைவேற்ற சொல்வாரா?
மேலும், மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியதுமே கடந்த 30 மாதங்களுக்கும் சேர்த்து கொடுக்க வேண்டும் என தமிழிசை சொல்கிறார்.
எங்களுக்கு ரூ.15 லட்சம் வேண்டாம், மோடியிடம் சொல்லி வெறும் ரூ.15 ஆயிரம் போட சொல்லுவாரா? என்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“