நாகாலாந்து மக்களை நான் இழிவுப்படுத்துவதாக ஆளுநர் கூறுவது முற்றிலும் திசை திருப்பும் முயற்சி என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில், ஆளுநரை விமர்சித்து பேசினார். அப்போது தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தமிழக அரசை வேண்டும் என்றே வம்புக்கு இழுக்கிறார் என்றும் தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுகிறார் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் ” இப்படி சொல்கிறேன் என்று தவறாக எடுத்துகொள்ள வேண்டாம். நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பவர்கள், அவர்களே அங்கு ஆளுநராக இருந்த, ஆர்.என்.ரவியை அனுப்பிவிட்டார்கள், அப்போது உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் “ என்று அவர் பேசினார்.
ஆர். எஸ்.பாரதியின் பேச்சுக்கு ஆளுநர் ரவி கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் எக்ஸ் பக்கத்தில், “ நாகாலாந்து மக்களை இழிவுப்படுத்துவதை ஏற்க முடியாது. நாகா இன மக்கள் துணிச்சல் மிக்கவர்கள், நேர்மையானவர்கள். கண்ணியமானவர்கள். அவர்களை திமுகவின் ஆர். எஸ். பாரதி நாய்க்கறி உண்பவர்கள் என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது. ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என ஆர்.எஸ் பாரதியை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இதற்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார். ” நாகாலாந்து மக்களை நான் இழிவுப்படுத்துவதாக ஆளுநர் கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பது அவர்களின் கலாசாரம் என்பதை கவுகாத்தி உயர்நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“