கர்நாடக மேகதாட்டு அணை கட்டுமானத்திற்கு தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், அதனை தடுத்து நிறுத்தி கடலில் கலக்கும் உபரி நீரை இராசி மணலில் தமிழ்நாடு அணை கட்ட வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் கங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன், தென்னிந்திய நதிகள் இணைப்பு தலைவர் பி.அய்யாக்கண்ணு ஆகியோர் தலைமையிலான குழுவினர் இன்று அஇஅதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமியை சேலத்தில் அவரது இல்லத்தில் சந்தித்து விவாதித்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் தெரிவித்ததாவது, காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு தரக்கூடாது என்கிற உள்நோக்கத்தோடு மேகதாட்டு அணை கட்ட சட்ட விரோதமாக கர்நாடகா முயற்சித்து வருகிறது. கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் குருபுரு சாந்தகுமார் தலைமையில் 15 பேர் கொண்ட விவசாயிகள் குழுவும், தமிழ்நாட்டில் எங்கள் தலைமையிலான குழுவும் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்து டெல்டா முழுமையும் ஆய்வு செய்தோம். தொடர்ந்து இராசிமணல் அணைக்கட்டும் இடத்தை பார்வையிட்டோம்.
அடுத்த கலந்துரையாடல் கூட்டத்தை மாண்டியாவில் நடத்த முடிவெடுத்துள்ளோம். அதன் பிறகு இரு மாநிலங்களுக்கும் சம்பந்தமில்லாத நிபுணர்கள் குழுவை அமைத்து ஆய்வு செய்ய உள்ளோம். இதற்கிடையில் தமிழ்நாட்டில் இராசிமணல் கட்டுமானத்திற்கான ஒத்தக்கருத்தை உருவாக்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். முதற்கட்டமாக இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து விவாதித்துள்ளோம்.
அப்போது அவர் தனது ஆட்சி காலத்திலேயே தமிழ்நாட்டில் கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து அணையை கட்டுவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். கர்நாடகாவிற்கு குடிதண்ணிருக்கும் மின்சாரத்திற்கும் உரிய உத்திரவாதம் அளித்தோம். ஆனால் கர்நாடகா அரசாங்கம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்கிற அரசியல் பார்வையோடு செயல்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து கர்நாடகாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்வதால் தமிழ்நாட்டுக்கு எதிரான நிலையையே கர்நாடகம் பின்பற்றுவது வேதனை அளிக்கிறது.
எனவே, விவசாயிகள் அமைப்புகளோ அல்லது அரசோ அணை கட்டுவதற்காக அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டால் அஇஅதிமுக பங்கேற்கும் என்றும் விவசாயிகளுக்கு துணை நிற்கும் எனவும் உறுதி அளித்தார்.
பின்னர் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க பிரமுகர் பி.அய்யாக்கண்ணு பேசியதாவது, கர்நாடக சட்டத்திற்கு புறம்பாக அணைக்கட்டுவதை அனுமதிக்க மாட்டோம். உரிய காலத்தில் நமக்கு தர வேண்டிய தண்ணீரை உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் கர்நாடக அரசு தண்ணீரை கொடுக்க மறுக்கிறது.
சென்ற 2023 ஆண்டு தண்ணீரை கொடுக்க மறுத்ததால் மிகப் பெரும் பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. நடப்பாண்டு குறுவை அடியோடு அழிந்திருக்கிறது. எனவே, கர்நாடக அரசு மீது ஒரு லட்சம் கோடி இழப்பீடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். இராசி மணல் அணை கட்டுமானத்திற்கான ஆதரவை அனைவரிடம் கோரி பெற உள்ளோம் என்றார்.
எதிர்கட்சித் தலைவருடனான இந்த சந்திப்பில், மாநில அமைப்பு செயலாளர் நாகை எஸ்.ஸ்ரீதர், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எம் செந்தில்குமார், தஞ்சை மண்டல தலைவர் துரை பாஸ்கரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.