கேரளாவில், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகும் 2 குழந்தைகள் ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்ககம் (DPH) சுகாதாரப் பணியாளர்களுக்கு ரேபிஸ் குறித்த முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. நாய் கடித்த வகையை அடையாளம் கண்டு, ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) மருந்தை ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசியுடன் (ARV) முறையாகச் செலுத்துவது குறித்து சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
உயிரிழப்புகளுக்கான காரணங்கள்:
ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் போஸ்ட் எக்ஸ்போஷர் ப்ரோபிலாக்ஸிஸ் (PEP) சிகிச்சையைத் தொடங்குவதில் ஏற்பட்ட கால தாமதம். கடிபட்ட காயத்தை சரியான முறையில் சுத்தம் செய்யத் தவறியது. பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி டோஸ்களை விடுவித்தது அல்லது முழுமையான அட்டவணையைப் பின்பற்றாதது. ஆழமான, ரத்தப்போக்குடன் கூடிய காயங்கள் (Category III exposure) ஏற்பட்டிருக்கலாம். தவறான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) சேமிப்பு அல்லது நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்திருக்கலாம்.
சுகாதாரத்துறை அறிவுறுத்தல்:
ரேபிஸ் என்பது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் கொடிய வைரஸ் தொற்று என்பதால், அதன் அறிகுறிகள் தோன்றியவுடன் உயிரிழப்பு கிட்டத்தட்ட உறுதி என்று DPH எச்சரித்துள்ளது. எனவே, சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ரேபிஸ் தடுப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், இதனை மற்ற சுகாதாரப் பணியாளர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடி வகைகள் மற்றும் சிகிச்சை:
ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பது PEP-ன் முக்கிய அம்சமாகும். கடிபட்ட காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. DPH வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கடிபட்ட காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுபடும்:
-
பிரிவு 1: விலங்குகளைத் தொடுவது, காயம் இல்லாத தோலில் நக்குவது - PEP தேவையில்லை.
-
பிரிவு 2: ரத்தப்போக்கு இல்லாத சிறிய கீறல்கள்/சிராய்ப்புகள் - தடுப்பூசி மட்டும் தேவை.
-
பிரிவு 3: தோலைத் துளைக்கும் கடி அல்லது கீறல்கள், உடைந்த தோலில் நக்குவது - தடுப்பூசியுடன் RIG தேவை.
பிரிவு 3 காயங்களுக்கு, RIG மருந்து முதல் தடுப்பூசி செலுத்தப்பட்ட அதே நாளில் (Day 0) காயத்தைச் சுற்றியுள்ள பகுதியில் செலுத்த வேண்டும். முதல் தடுப்பூசி டோஸ் போடப்பட்ட 7 நாட்களுக்குப் பிறகு RIG செலுத்தக்கூடாது. சுகாதாரப் பணியாளர்களுக்கு கடி வகைகளை அடையாளம் காணவும், RIG-ஐ சரியாக நிர்வகிக்கவும் பயிற்சி அளிப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
"ரேபிஸ் PEP சிகிச்சை முறையாகச் செய்யப்பட்டால் மட்டுமே உயிரைக் காப்பாற்றும். சரியான காயம் பராமரிப்பு, சரியான நேரத்தில் மற்றும் முழுமையான தடுப்பூசி, மற்றும் RIG (தேவைப்பட்டால்) சரியான வெப்பநிலையில் தடுப்பூசிகளை சேமித்து வைத்தல் ஆகியவை மிகவும் முக்கியமானவை" என்று பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர் டி.எஸ். செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.