திருச்சி மாநகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. மேலும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நாய்களை அடையாளம் கண்டு மீண்டும் 5 ஆயிரம் நாய்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் இன்று (ஏப்ரல் 4) தொடங்கியது.
இந்தப் பணிகளை மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், ஆணையர் வே. சரவணன், துணை மேயர் ஜி. திவ்யா, நகர் நல அலுவலர் விஜய் சந்திரன், மண்டலத் தலைவர் துர்க்காதேவி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேயர் அன்பழகன் கலந்து கொண்டார். அப்போது, "அவசர அவசியம் கருதி தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் நான்கு மையங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில் 9,841 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இம்மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் சுற்றித் திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கும் பணிகளை, அனிமல் ஹெல்பிங் ஹேண்ட்ஸ் என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டது. அதன்படி, 43,767 தெருநாய்கள் தற்போது இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
செய்தி - க. சண்முகவடிவேல்