Advertisment

செங்கோட்டையன், முனுசாமி, வேலுமணி, வைத்திலிங்கம்... அதிமுக சட்டமன்றக் குழு பதவிகளுக்கு கடும் போட்டி

Race for deputy leader, whip starts in ADMK to tamilnadu assembly :எதிர்கட்சி துணைத் தலைவர் பதவி என்பது, மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அடுத்த இடத்தில் முக்கிய இடம் வகிப்பதாலும், ஒபிஎஸ் துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுப்பதாலும், கட்சியின் மற்ற முக்கிய தலைவர்களான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி மற்றும் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோரிடையே பதவியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

author-image
WebDesk
New Update
செங்கோட்டையன், முனுசாமி, வேலுமணி, வைத்திலிங்கம்... அதிமுக சட்டமன்றக் குழு பதவிகளுக்கு கடும் போட்டி

அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பிற சட்டமன்ற பொறுப்பாளர் பதவிகளை பிடிக்க, அதிமுகவுக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த உட்கட்சி மோதலுக்கு அதிமுக தயாராகி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், அதிமுகவின் சட்டமன்ற குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்திற்கு ஜூன் 14 ம் தேதி காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி முதல் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், அதிமுகவின் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவர், கொறடா, செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

அதிமுகவில் தற்போது, 66 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஏற்கனவே கடும் போட்டிக்கு இடையே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்போது எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியை எடுத்துக் கொள்ளுங்கள் என ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் கூறப்பட்டபோது அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் அதிமுக சட்டமன்றக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் நடைபெறும் நாளில் கட்சி தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கோரி டிஜிபி மற்றும் மாநகர காவல் துறையிடம் முறையான கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கட்சிக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியை வெளிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலியில் சுவரொட்டிகள் தோன்றின. அந்த சுவரொட்டிகளில் ஒபிஎஸை கலந்தாலோசிக்காமல் எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம் என்று கட்சி தலைமைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஒபிஎஸை புறக்கணித்தால், அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமையகத்தை முற்றுகையிடுவார்கள் என்றும் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எதிர்கட்சி துணைத் தலைவர் பதவி என்பது, மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அடுத்த இடத்தில் முக்கிய இடம் வகிப்பதாலும், ஒபிஎஸ் துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுப்பதாலும், கட்சியின் மற்ற முக்கிய தலைவர்களான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி மற்றும் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோரிடையே பதவியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் கடந்த 2006 ஆம் ஆண்டில் கட்சியின் கொறடாவாக செங்கோட்டையன் இருந்துள்ளார். மேலும் 2017 ஆம் ஆண்டில் சசிகலாவிற்கு எதிராக ஒபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, சட்டசபையின் அவை முன்னவராகவும் செங்கோட்டையன் இருந்துள்ளார்.

சட்டமன்ற பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பிராந்தியமும் சமூகமும் முக்கிய பங்கை வகிக்கும் என்பதால், ஆதிக்க சாதிகளான, வன்னியர் மற்றும் முக்குலத்தோர் ஆகியோருக்கே இந்த பதவிகள் கிடைக்கும் என்று தெரிகிறது. ஒருவேளை எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியை ஒபிஎஸ் ஏற்றுக்கொண்டால், அடுத்த செல்வாக்கு மிக்க பதவியான, கொறடா பதவியை பிடிக்க கட்சிக்குள் கடும்போட்டி நிலவி வருகிறது. ஏனெனில் கொறடா பதவிதான் சட்டசபைக்குள் கட்சி ஒழுக்கத்தை அமல்படுத்தக் கூடிய இடத்தில் உள்ளது. கொறடா பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், கே.பி.முனுசாமி மற்றும் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோரைத் தவிர முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் போட்டியில் உள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர், கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளரான வி.கே.சசிகலா, கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு வருகிறார். ஆனால் அத்தகைய முயற்சிகள் இதுவரை பெரிதாக சசிகலாவுக்கு கைகொடுக்கவில்லை. மேலும், இதனால் அதிமுகவுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

இதனிடையே, சசிகலா ஒருபோதும் அதிமுகவுக்கு திரும்புவது பற்றி யோசிக்க முடியாது என்றும், அதிமுகவைப் பற்றி பேச அவருக்கு தார்மீக உரிமை இல்லை" என்றும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி. வி.சண்முகம் கூறியுள்ளார். மேலும் சசிகலாவின் தூண்டுதலின் பேரில், கடந்த இரண்டு நாட்களில் தனக்கு 500 நபர்களிடமிருந்து மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும் இதுகுறித்து திண்டிவனம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார்.

அடுத்ததாக, கட்சியில் பொதுச் செயலாளர் என யாரும் இல்லை என்றும், தற்போதைய அமைப்பே தொடரும் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரும் கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Admk Minister K A Sengottaiyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment