சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் ரகு என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக்ஷா உடன் பூங்காவில் உள்ள அறையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ரகு தனது உறவினர் ஒருவர் இறந்ததால் விழுப்புரம் சென்றுள்ளார். இதனிடையே, நேற்று மாலை பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் 2 நாய்களுடன் பூங்காவுக்கு வந்துள்ளார்.
அப்போது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சுதக்ஷாவை இரு நாய்களும் திடீரென கடித்துள்ளன. குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த தாய் சோனியா குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் நாய்கள் கடித்துள்ளன.
இந்த நிலையில் தாயும்- குழந்தையும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.
அப்போது, “நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்; தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்" என்றார்.
மேலும் இது தொடர்பாக முழு அறிக்கை தயார் செய்யப்படும் என்றார். இந்த நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதே? என்ற கேள்விக்கு இதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் வளர்ப்பு பிராணிகள் வளர்ப்போர் ஆன்லைனிலும் உரிமம் பெற்றுக் கொள்ளலாம். தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“