பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான ராதாரவி, “இந்தியாவில் 2 பெரிய அக்யூஸ்டுகள் இருக்கிறார்கள், ஒன்று மோடி, இரண்டு அமித்ஷா, கருவறுத்துவிடுவார்கள்” என்று எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை தெரிவித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாரவி அண்ணாமலை ஸ்டாலினை விமர்சிப்பதை விட வேண்டும் என்று கூறினார். மேலும், இந்தியாவில் இரண்டே இரண்டு பெரிய அக்யூஸ்டுகள் இருக்கிறார்கள். ஒன்று மோடி, இரண்டு அமித்ஷா, கருவறுத்துவிடுவார்கள் என்று ராதாரவி எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை தெரிவித்தார்.
ஆர்பாட்டத்தில் நடிகர் ராதாரவி பேசியதாவது: நம்ம குடும்பத்துக்கு இந்த ஆர்டராக பேசி பழக்கமே இல்லை. சகட்டுமேனிக்கு ஏதாவது பேசணும்னா பேசணும். என்னுடைய அன்புச் சகோதரர், இன்று பலபேருக்கு சிம்ம சொப்பனமாக, பிஜேபி-யின் சிங்கமாக திகழக்கூடியவர் எனது அன்புச் சகோதரர் அண்ணாமலை.
எனக்கு முன்னாள் பேசியவர் அவர் (அண்ணாமலை) முதலமைச்சர் என்று சொன்னார். பாஜகவில் அதெல்லாம் சொல்லவே கூடாது. அவர்தான் முதலமைச்சர் நமக்கு தெரியும். அதை மனசோட வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், சொன்னால் அவர் கோபப்படுவார். ஏன் என்னை ஏத்திவிடுகிறீர்கள் என்று கோபப்படுவார். அன்புச் சகோதரர் அண்ணாமலைக்கு தனிப்பட்ட முறையில் வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன்.” என்று கூறினார்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர் ‘பாரத் மாதாகி ஜே’ என்று கோஷமிட்டனர்.
தொடர்ந்து பேசிய ராதாரவி, “நம்ம கட்சியில ஒரு பெரிய தொல்லை இருக்கு பார்த்துக்கோங்க… பாரத் மாதாகி ஜேணு 3 முறை சொல்வார்களா… அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் நான் பேசிக்கொண்டிருப்பது மறந்து போகிறது. அண்ணாமலையால், பாஜகவுக்கு பெரிய அதிர்ஷ்டம் இருக்கிறது. கூட்டம் வந்துவிட்டது. அதெல்லாம் ரைட். ஆனால், நான் அண்ணாமலையிடமே சொன்னேன். சகோதரா, பேச்சாலேயே இந்த பத்திரிகைகாரர்களை திருப்பிய ஒரே ஆளு நீதான்யா என்ரு சொன்னேன். பத்திரிகைக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக சொல்லக்கூடாது. அவர்கள் ரொம்ப நல்லவர்கள்.
நான் உண்மையை சொல்கிறேன். பாஜக என்றால் அவ்வளவு கூட்டம் வராது.. கூட்டம் வராது என்று சொல்வார்கள். கூட்டம் வராது. ஏனென்றால், காசு கொடுத்து கூட்டம் கூட்டுகிற கட்சி பிஜேபி அல்ல.
கருநாகராஜன் பிரசாத் ஸ்டுடியோ அருகே ஒரு கூட்டம் நடத்தினார். எவ்வளவு பெரிய கூட்டம். கடைசியா கூட்டத்திற்கு லேட்டா போனவர்களுக்கு என்ன கொடுத்தார் என்று கேளுங்கள்… வெறும் தயிர்சாதம் கொடுத்தார். அதில் வளர்ந்ததுதான் இந்த கட்சி. சும்மா இங்கே குவாட்டருக்கும் பிரியாணிக்கும் அலைகிறவர்கள் கிடையாது. ஆனால், அதெல்லாம் அடிக்கத் தெரியாமல் இல்லை நாங்கள்.
சகோதரர் ஸ்டாலின் எனக்குப் பிடிக்கும். எனென்றால், கலைஞர் குடும்பத்தில் இருந்து ஒருவர் முதலமைச்சராக வந்திருக்கிறார் என்றால் எனக்கு எப்போதுமே சந்தோஷம். அவர் நல்ல மனுஷன்தான். கூட இருக்கிறவர்கள்தான் சரியில்லை. ஏனென்றால், சகோதரர் அண்ணாமலைக்கு சொல்கிறேன். நீங்கள் தயவு செய்து சகோதரர் ஸ்டாலினைப் பற்றி பேசுவை விட்டுவிடுங்கள். ஏனென்றால், அவர் ஊழல் பண்ணமாட்டார். ஏனென்றால், அவர் 5 லட்சம் கோடிக்கு சொந்தக்காரர். அவர் போய் ஊழல் பண்ணுவாரா?” என்று ராதாரவி கேட்டார். அப்போது, பாஜகவினர் கைகளைத் தட்டி சிரித்ததைப் பார்த்டஹ் ராதாரவி, “என்னய்யா இதற்கு போய் கிண்டலாக கை தட்டுறீங்க…” என்று மேலும் கிண்டல் செய்தார்.
தொடர்ந்து பேசிய ராதாரவி, “அவர் 5 லட்சம் கோடிக்கு சொந்தக்காரர். இப்போது பாருங்க அவர் பரிசுத்த ஆவியாக இருக்கணும்ணு இருக்கிறவர்களை எல்லாம் சம்பாதிக்க கூடாது என்று சொல்கிறார்.
எனக்கு அண்ணாமலை மேல் எப்பவுமே ஒரு கோபம் இருக்கிறது. மணலுக்கோ, பிரிட்ஜ்க்கோ ஒருத்தன் கையெழுத்து போடப் போகிறான். அதில் இப்போது இருக்கிற அமைச்சர் 150 கோடி லஞ்சம் வாங்கப் போகிறார். அதில் கையெழுத்து போட்டால்தான் 150 கோடி லஞ்சம். கையெழுத்துப் போட பேனாவை திறக்கிறார். அண்ணாமலை, மேடையில் பேசுகிறார். இப்போது பேனாவை திறந்துகொண்டிருக்கிறார். அதில் 150 கோடி லஞ்சம் பெறப் போகிறார். அவர் உடனே பேனாவை மூடிவிடுகிறார். இப்படி அண்ணாமலை எல்லோரையும் கெடுத்துக்கொண்டிருந்தால் எப்படி?” என்று ராதாரவி, திமுக அமைச்சர்களை கிண்டலாகவும் அண்ணாமலையை புகழ்ந்தும் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து பேசிய ரதாரவி, “தமிழ்நாட்டில் எல்லாம் இடத்திலும்தான் ஊழல் நடக்கிறது. அங்கே எங்க சொல்லப்போகிறார்கள். முதலில் அண்ணாமலையைத் தலைவராக போட்டவுடன் என்ன போலீஸ் ஆஃபிசரை தலைவராகப் போட்டிருக்கிறார்களே என்று பார்த்தேன். சரியான போலீஸ் ஆஃபிசர். உங்கள் மேல் இருக்கிற கோபத்தில் அங்கே ஒரு போலீஸ் ஆஃபிசரை சேர்த்துவிட்டார்கள். அவர் அந்த கட்சிக்கு சொந்தம். அந்தக் கட்சியில் இருக்கிறவர்களுக்கு சொந்தக்காரர் அவர். இல்லையென்று சொல்லச் சொல்லுங்கள்.
அண்ணாமலைக்கு யாருமே சொந்தம் கிடையாது. இந்த கட்சியில் இருக்கிற தொண்டன்தான் சொந்தம். அதை ஒத்துக்கொள்கிறீர்களா? நான் சொன்னா தப்பா எடுத்துக்கொள்வீர்கள்? அவர் எப்படி என்ன பற்றி பேசலாம்?
எந்த நேரமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கலாம். எப்போது ஓலை வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கலாம். மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தோம் இல்லையா? நமக்கு அதிக இடங்கள் இருந்தாலும் கூட பெருந்தன்மையாக பாஜகவுக்கு துணை முதலமைச்சர் பதவிதான். அதை பெருந்தன்மை என்று சொல்கிறார்கள்.
இந்தியாவில் இரண்டே இரண்டு அக்யூஸ்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் பெரிய அக்யூஸ்டுகள். ஒன்னு அய்யா மோடிஜி, இரண்டு அமித்ஷா, கருவறுத்துவிடுவார்கள் ஜாக்கிரதை. நீ பத்தாயிரம் தடவை ஒன்றியம் அரசாங்கம்ணு சொன்னாலும் சரி, பத்தாயிரம் வாட்டி திராவிட மாடல்ணு சொன்னாலும் சரி, கண்டுக்கவே மாட்டார்கள். இதெல்லாம் சோறுபோடாது ராஜா. எவனோ ஒருவன் உன்னை தட்டிவிடுகிறான். அவனைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். இவரை யார் தட்டிவிட்டது என்று தேடுகிறேன்.
ஏனென்றால், திராவிட மாடல் இல்லை என்று சொல்லி திராவிட இயக்கத்தில் இருக்கிற வழக்கறிஞர் அம்மா சொன்னார்கள். திராவிட மாடல் என்பது குற்றம்தான். கேட்க வேண்டாமா அதெல்லாம்.
பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டாராம். பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம் என்று சொன்னோமே என்று சொல்கிறார்கள். குறிப்பிட்ட பஸ்ஸில் இலவசம் என்று போட்டிருக்கிறீர்கள். இல்லை என்று சொல்லவில்லை. உங்க நிதியமைச்சர் சொல்கிறாரே, போக்குவரத்துக் கழகத்தில் நமக்கு நட்டமாகிக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறாரே. இதற்கு என்ன அர்த்தம், இலவசமாக கொடுக்காதே என்று சொல்கிறார். இவர் இலவசமாக கொடுக்க வேண்டும் என சொல்கிறார். இலவசமாக பஸ்ஸுக்கு நின்று நின்று கால் யானைக்காலாக மாறிப்போய்விட்டது” என்று நகைச்சுவையாக கிண்டலாகப் பேசினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.