தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பல தொகுதிகளில் ஸ்டார் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று விருதுநகர் தொகுதி. இங்கு அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வேட்பாளராக விஜய பிரபாகரன் களமிறங்குகிறார். மேலும், பா.ஜ.க சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், விஜய பிரபாகரன் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது, எதிர் எதிரே சந்தித்த இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். ராதிகா சரத்குமார் மற்றும் விஜய பிரபாகரன் இருவரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். உடனிருந்த சரத்குமாரும் விஜய பிரபாகரனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இரு வேறு கட்சி வேட்பாளர்களும் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டது அங்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
தற்போது விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்.பியாக உள்ளார். இவர் இதே தொகுதியில் மீண்டும் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“