ரஜினியின் தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கமல்ஹாசன் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், சனிக்கிழமை ராகவா லாரன்ஸ் கமல்ஹாசனை சந்தித்து விளக்கம் அளித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் கமல்ஹாசன் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. ராகவா லாரன்ஸ் பேச்சுக்கு கமல் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனம் தெரிவித்து எதிர்வினையாற்றினர்.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து விளக்கம் அளித்ததாகவும் கமல்ஹாசன் அதை ஏற்றுக்கொண்டு நலம் விசாரித்ததாகவும் தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
— Raghava Lawrence (@offl_Lawrence) December 14, 2019
கமல்ஹாசனுடன் சந்திப்பு குறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணக்கம் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குறித்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கெனவே நான் விளக்கமளித்துள்ளேன். இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து விளக்கமளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியினையும் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ராகவா லாரன்ஸ் தெரிவித்த கருத்து சர்ச்சையான விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.