’ஜெய் பீம்’ நிஜ பார்வதி அம்மாளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ், தனது செலவில் வீடு கட்டி தருவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். லாரன்ஸ் பார்வதி அம்மாளை சந்தித்து பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சூர்யா தயாரித்து, நடித்துள்ள ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். 1994 ஆம் ஆண்டில் கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் படம் வெளியானது முதல் சர்ச்சைகளும் வெளி வரத் தொடங்கியுள்ளன. உண்மை குற்ற நிகழ்வில், இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு மீது கொடூர மனித உரிமை மீறலை அரங்கேற்றியவர் அந்தோணிசாமி என்ற சப் இன்ஸ்பெக்டர்தான். ஆனால், அவருடைய பாத்திரத்தை குருமூர்த்தி என்று மாற்றியது சர்ச்சையானது. ராஜாக்கண்ணு, பெருமாள்சாமி, சந்துரு போன்ற கதாபாத்திரங்களின் பெயர் மாற்றப்படாமல் அப்படி வந்து நிலையில், குற்றம் புரிந்தவர் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளதை ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே ‘ஜெய் பீம்’ படத்தில் செங்கேணி கதாபாத்திரமான உண்மையான ராஜாகண்ணுவின் மனைவியான பார்வதி, “என் வாழ்க்கை கதையை வைத்து கோடி கோடியா சம்பாதிக்கிறார்கள். எனக்கு சூர்யா ஒரு உதவியும் செய்யவில்லை” என்று பேசும் வீடியோ சமூக ஊடங்களில் வைரலானது. பார்வதி இப்போதும் கூலித் தொழிலாளியாக உள்ளார்.
இந்தநிலையில் பார்வதிக்கு சூர்யா உதவ வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்றுகொண்ட சூர்யா, பார்வதிக்கு 10 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்வதாக சூர்யா அறிவித்திருந்தார்.
ஆனால், சூர்யாவுக்கு முன்பே பார்வதியின் நிலையை அறிந்து வருந்திய நடிகர் ராகவா லாரன்ஸ், “பார்வதி அம்மாவுக்கு தன் சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக” ட்விட்டரில் அறிவித்தார்.
இது குறித்து ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், செய்யாத குற்றத்துக்காக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட, ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கை நிலையை வலைப்பேச்சில் பார்த்தப்போது என்னைப் பெரிதும் பாதித்தது. பிஸ்மி அவர்களிடம் மேலும் விவரங்கள் கேட்டறிந்தேன். பார்வதி அம்மாளுக்கு எனது சொந்த செலவில் வீடு கட்டி கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். என தெரிவித்துள்ளார். மேலும் படக்குழுவினருக்கு நன்றிகளையும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ராகவா லாரன்ஸ், பார்வதி அம்மாளை சந்தித்து பேசியதாக புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இதை பாஜகவினரும் பாமகவினரும் அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், இதுபோன்ற புகைப்படங்களை ராகவா லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிரவில்லை. அதேவேளையில் நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “நிஜ ஹீரோ நடிகர் ராகவா லாரன்ஸ். தன்னிச்சையாக அவர்களின் (பார்வதியின்) வீட்டிற்கு சென்று தேவையானவற்றை செய்துள்ளார்” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil