ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற ஐந்து பொருளாதார நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஷான் த்ரே, அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.நாராயணன் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்த பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனை மேற்கொள்வார். அந்தவகையில் சமீபத்தில் கூட ரகுராம் ராஜனுடன் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அடுத்த வாரம் தொடங்கி வைக்கப்பட உள்ள நிலையில் ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், இன்று ரகுராம் ராஜன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான பயனாளிகள் பட்டியல் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரகுராம் ராஜன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மகளிர் உரிமை தொகைக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. பொருளாதார தகுதிகளில் தளர்வு அளிக்கப்பட்டதால் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலினும் தகுதியுள்ளவர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியிலிருந்து அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“