Rahul Gandhi Announced TNCC Election Committees for Loksabha Election 2019: தமிழக காங்கிரஸுக்கு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி குழுக்களை அமைத்து ராகுல் காந்தி அறிவிப்பு வெளியிட்டார். முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்த திருநாவுக்கரசர் 2 நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டு, புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். வசந்தகுமார், மயூரா ஜெயகுமார், தேனி ஜெயகுமார், விஷ்ணுபிரசாத் ஆகியோர் செயல் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
அடுத்தகட்டமாக தமிழக காங்கிரஸுக்கு நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக குழுக்களை அமைத்து இன்று (பிப்ரவரி 5) ராகுல் காந்தி உத்தரவிட்டார். அதன்படி 25-க்கும் மேற்பட்டோர் அடங்கிய மாநில தேர்தல் கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கமிட்டியின் தலைவராக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி இருப்பார்.
மாநில தேர்தல் கமிட்டியில் கே.ஆர்.ராமசாமி, பி.சிதம்பரம், குமரி அனந்தன், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், மணிசங்கர அய்யர், சுதர்சன நாச்சியப்பன், பிரபு, தனுஷ்கோடி ஆதித்தன், யசோதா, செல்லக்குமார், ஜே.எம்.ஆரூன், பீட்டர் அல்போன்ஸ், நாசே ராமச்சந்திரன், ராபர்ட் புரூஸ், குஷ்பூ, கேசவன், தமிழகத்தை சேர்ந்த அகில இந்திய செயலாளர்கள், மாநில செயல் தலைவர்கள் ஆகியோர் இதன் உறுப்பினர்கள்.
தமிழக காங்கிரஸ் மகளிரணி, மாணவர் அணி உள்பட துணை அமைப்புகளின் தலைவர்கள் இதன் அலுவல் சாரா உறுப்பினர்கள். மாநில தேர்தல் கமிட்டியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு வேறு பதவி வழங்கப்படாமல் இருந்த இளங்கோவனுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக கருதப்படுகிறது. இதர சீனியர் தலைவர்கள், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
திருநாவுக்கரசர் தலைமையில் ஜே.எம்.ஆரூன், குஷ்பூ, விஜயதரணி உள்பட 35 பேர் அடங்கிய பிரசாரக் குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவுக்கு தலைவராக திருநாவுக்கரசரும், துணைத் தலைவராக ஆரூனும், அமைப்பாளராக குஷ்பூவும் செயல்படுவார்கள்.
தங்கபாலுவை தலைவராகக் கொண்ட விளம்பரக் கமிட்டியில் ஏ.பி.சி.வி.சண்முகம் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டார். ஜோதிமணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பி.வி.ராஜேந்திரன் உள்பட 16 பேர் இந்தக் கமிட்டியின் உறுப்பினர்கள்.
தேர்தல் குழுக்களில் தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே இடம் பெறும் வகையில் ராகுல் காந்தி அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

