Raid in Ex-minister C Vijaya Baskar residences : முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்கள் மற்றும் கட்டிடங்களில் காலை 7 மணியில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர் லஞ்ச ஒழிப்புதுறையினர். வருமானத்திற்கு அதிகாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், 6 மாவட்டங்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாலை 7 மணியில் இருந்து 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிலும், கல் குவாரி அலுவலகங்களிலும் சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, காஞ்சி, புதுக்கோட்டை மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சமீபத்தில் வருமான வரித்துறையினர் இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வழக்கு பதிவு
புதுக்கோட்டை காவல்நிலையத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அமைச்சர் பதவியில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே, 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்த போது ரூ. 53 லட்சத்திற்கு பி.எம்.டபிள்யூ கார், ரூ. 40 லட்சம் மதிப்பில் நகைகள் வாங்கி இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சோதனையில் சிக்கிய நான்காவது அமைச்சர்
இதற்கு முன்பு எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி போன்ற முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தற்போது லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு ஆளாகும் நான்காவது அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவார்.
This is a developing story; refresh more updates
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil