லஞ்சத்தைத் தடுக்க வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீர் சோதனை – உயர்நீதிமன்றம்

தங்கள் அலுவலகங்களில் நடக்கும் ஊழல் நடவடிக்கைகளை கண்மூடி வேடிக்கை பார்ப்பதை விடுத்து, உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க வேண்டும்

By: March 11, 2019, 8:07:44 PM

ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், திடீர் சோதனைகள் நடத்த வேண்டுமென லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தல் பிரிவு சிறப்பு தாசில்தாரர் தர்மராஜ், ஊழல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தர்மராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, 2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கின் அடிப்படையில், தனது பதவி உயர்வை தடுக்கும் நோக்கில் 2018 அக்டோபரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

2016-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து தற்போது கவனத்துக்கு வந்ததால், உடனடி நடவடிக்கை எடுத்ததாக வேண்டுமென ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பணியிடை நீக்கம் என்பது குற்றச்சாட்டுகள் குறித்து, துறை ரீதியான விசாரணைக்கு ஏதுவாக அலுவல்களில் இருந்து நீக்கி வைப்பது தானே தவிர, தண்டனையல்ல எனவும், இந்த விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், நாடு முழுவதும் புற்று நோய் போல பரவியுள்ள ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், லஞ்சம் கொடுக்காமல், தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை உள்ளதால், அங்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் அடிக்கடி திடீர் சோதனைகளை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து அலுவலகங்களிலும் நேர்மையான அதிகாரிகள் இருப்பதாகக் கூறிய நீதிபதி, தங்கள் அலுவலகங்களில் நடக்கும் ஊழல் நடவடிக்கைகளை கண்மூடி வேடிக்கை பார்ப்பதை விடுத்து, உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்குவதை முறைப்படுத்தி, எத்தனை நாட்களில் சான்றிதழ் கிடைக்கும் எனக் குறிப்பிட்டு, குடிமக்கள் சாசனத்தை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதி அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Raid should be done at taluk offices to avoid scam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X