IT Raids Kanimozhi Residence: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கும் தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் குறிஞ்சி நகர் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது.
தேர்தல் நேரத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சியினரின் வீட்டில், வருமானவரி சோதனைகள் நடத்தப்படுவதால், அக்கட்சியைச் சேர்ந்தவர்களும், தொண்டர்களும் ஆழ்ந்த கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு சோதனை முடிந்து சுமார் 10.30 மணியளவில் அதிகாரிகள் வெளியில் வந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கனிமொழி. ”சுமார் 8.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த அனுமதி கேட்டனர். அனுமதி இருக்கிறதா என நான் கேட்டதற்கு அவர்கள் தரப்பில் பதில் எதுவும் இல்லை.
எதிர்க்கட்சி வேட்பாளர் என்பதாலேயே என்னை சோதனை செய்திருக்கிறார்கள். ஒரு மணி நேரம் முழுமையாக சோதனை செய்த அதிகாரிகள், வீட்டில் ஒன்றுமே இல்லை என்று சொல்லி அவர்களாகவே சென்றுவிட்டார்கள்.
தமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. அங்கு சென்று சோதனை நடத்தத் தயாரா?
தூத்துக்குடியில் எங்களை பயமுறுத்துவதாக நினைத்துக் கொண்டு சோதனை நடத்தி இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை பயமுறுத்த ஐடி துறையை கையில் வைத்துக் கொண்டு பிரதமர் மோடி இதை செய்திருக்கிறார்.
பணம் இருப்பதாக புகார் அளித்தது யார் என்பதை கடைசி வரை அதிகாரிகள் சொல்லவில்லை” என அப்போது அவர் தெரிவித்தார்.