ரயில்வே கட்டுப்பாட்டு அறை மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் தங்களுக்கிடையேயான உரையாடலின் போது தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில், பேச தடை விதித்து இந்திய ரயில்வே அரசாணையை நேற்று ( ஜூன் 13ம் தேதி) வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக, நேற்று பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் இடையிலான ஆலோசனையின் போது ஆங்கிலம் அல்லது ஹிந்தியை தான் பயன்படுத்த வேண்டும். அப்போது, பிராந்திய மொழிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிராந்திய மொழியை பயன்படுத்தும் போது, ஒருவர் கூறுவது மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இரு தரப்பிற்கு இடையிலான ஆலோசனையை மேம்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ரயில்வே ஊழியர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பழைய நடைமுறையே தொடரும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
திமுக கண்டனம் : ரயில்வேயின் சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ரயில் நிலைய ஊழியர்கள் தமிழில் பேசக்கூடாது எனக்கூறி தமிழர்களின் உணர்வுகளை சீண்டி பார்க்கின்றனர். இது போன்ற சில்லரைத்தனமான உத்தரவுகளுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.