உணவகங்கள் அமைப்பதில் டெண்டர் முறைகேடு: இந்திய ரயில்வே பதிலளிக்க உத்தரவு

டெண்டர் ஒதுக்கீடு தொடர்பான இறுதி முடிவெடுக்க இந்திய ரயில்வேக்கு இடைக்கால தடை

ரயில்வே நிலையங்களில் தனியார் உணவகங்கள் அமைப்பதற்கான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஜூன் 12ம் தேதிக்குள் பதிலளிக்க இந்திய ரயில்வே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தனியார் உணவகம் அமைப்பதற்கான டெண்டரை இறுதி செய்யவும் இடைக்கால தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் பயணிகளின் தேவைக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட 24 ரயில் நிலையங்களில் “புட் ப்ளாசா” எனப்படும் உணவகங்கள் அமைக்க 9 ஆண்டுக்கான டெண்டர் கோரப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உணவகம் அமைப்பதற்கு ஈரோட்டை சேர்ந்த முஸ்தபா என்பவர் அளித்த டெண்டர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து முஸ்தபா தொடர்ந்த வழக்கு நீதிபதி பாஸ்கரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, டெண்டர் விண்ணப்பித்தவர்களில் அதிக தொகையாக ஆண்டு ஒன்றிற்கு 5 கோடியே 28 லட்சம் ரூபாய் தர தான் தயாராக இருந்த போதும், ரயில்வே அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தன்னை விட குறைந்த தொகையான 3 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் கேட்டவருக்கு டெண்டர் ஒதுக்கியுள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ரயில்வே அதிகாரிகளின் இந்த முறைகேட்டால், ஆண்டுக்கு 2 கோடி வரை மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதி, தற்போது டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், டெண்டர் ஒதுக்கீடு தொடர்பான இறுதி முடிவெடுக்க இந்திய ரயில்வேக்கு இடைக்கால தடை விதித்தார்.

மேலும், இந்த முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ஜூன் 12 ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் இந்திய ரயில்வேக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

×Close
×Close