க.சண்முகவடிவேல்
Trichy: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் திடீரென பாலத்தின் ஒரு பகுதி தூண் உள்வாங்கியது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சென்னை ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி., பொறியியல் வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தவுடன் பணிகள் துவங்கும் என்பதால் திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளது பின்வருமாறு:-
1) மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும்.
2) சென்னை,பெரம்பலூர் மார்க்கத்திலிருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல் வழியாக செல்லவேண்டும்.
3) சென்னை, பெரம்பலூர், அரியலூர் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பால்பண்ணை, துவாக்குடி, திருச்சி புதியசுற்றுச்சாலை வழியாக சென்று வரவேண்டும்.
4) சேலம், நாமக்கல் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் முசிறி, குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும்.
5) கோவை, கரூர் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும்.
6) அரியலூர் மார்க்கத்திலிருந்து மதுரை செல்லும் கனரக வாகனங்கள் நெ.1 டோல்கேட், முசிறி, குளித்தலை, மணப்பாறை, திண்டுக்கல் வழியாக சென்று வரவேண்டும்.
7) திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, விராலிமலையிலிருந்து சென்னைக்கு செல்லும் கனரகவாகனங்கள் மணிகண்டம், வண்ணாங்கோயில், மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும்.
8) திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் பயணிகள் பேருந்துகள் டி.வி.எஸ்.டோல்கேட், ஏர்போர்ட், திருச்சி புதிய சுற்றுச்சாலை, துவாக்குடி வழியாக செல்லவேண்டும்.
9) தஞ்சாவூரிலிருந்துதிருச்சிவரும் பயணிகள் பேருந்துகள் வழக்கமாகவரும் பாதையானதுவாக்குடி, திருவெறும்பூர், பால்பண்ணை வழியாக வரவேண்டும்.
10) மேலும் கூடுமானவரை அனைத்து வாகனங்களும் பொன்மலை இரயில்வேபாலம் வழியாகசெல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பழுதடைந்த பகுதியை முழுமையாக சீர் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“