மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இன்டெக்ரல் கோச் பேக்டரி (ஐசிஎஃப்) மற்றும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்) இணைந்து தயாரிக்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்சுகளின் மாதிரி படங்களை வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அரை-அதிவேக ரயிலின் பெட்டிகளின் கான்செப்ட் படங்களை வெளியிட்ட அஷ்வினி வைஷ்ணவ், வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் ஸ்லீப்பர் பதிப்புகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கடந்த வாரம், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஸ்லீப்பர் பெட்டிகள் பிப்ரவரி 2024 க்குள் வெளியிடப்படும் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் வெளியிட்ட படங்கள், அதிநவீன உட்புறம் மற்றும் வசதிகளுடன் பயணிகளுக்கு ஒரு புரட்சிகரமான ரயில் பயண அனுபவத்தை வழங்குவதாகத் தோன்றுகிறது.
மேலும், கான்செப்ட் ஸ்லீப்பர் கோச்சுகள் மிகவும் வசதியான இருக்கைகளுடன் ஒரு உன்னதமான மர வடிவமைப்பைக் கொண்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட மேல் விளக்குகள் காணப்படுகின்றன.
முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை 2019 பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பிரீமியம் ரயில் முதலில் புதுடெல்லி மற்றும் வாரணாசி இடையே அதன் பயணத்தைத் தொடங்கியது.
வந்தே பாரத் விரைவு ரயிலின் ஸ்லீப்பர் பதிப்பு தற்போதுள்ள பிரீமியம் ரயில்களுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம், பிரதமர் மோடி ஒன்பது வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“