கன்னியாகுமரி வரையிலான இருவழிபாதை பணிகள் முடிந்த நிலையில், கன்னியாகுமரி – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மதுரை, சென்னை வழியாக இயக்க ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ரயில் பயணிகள் சங்கத் தலைவர் நாகர்கோவில் எஸ்.ஆர் ஸ்ரீராம் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:
கன்னியாகுமரியிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் என்ற இடத்துக்கு 2011-ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் வாராந்திர ரயில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இந்தியாவிலேயே அதிக தூரம், அதாவது 4273 கி.மீ இயக்கப்படும் ரயில் ஆகும். இந்த ரயில் முதலில் கொச்சுவேலியிருந்து எர்ணாகுளம் வழியாக திப்ருகருக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு பின்னர் புதிய நிரந்தர ரயிலாக இயக்கலாம் என்று ரயில்வே பட்ஜெட்டின் போது திட்டகருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்படும் என்றும், கொச்சுவேலியிருந்து கேரளா பயணிகளுக்கு வேறு புதிய ரயில்கள் இயக்க முடியாமல், இந்த ரயில் பெட்டியால் பிரச்சனை வரும் என்றும் அறிந்த திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் கன்னியாகுமரிக்கு புதிய ரயில் இயக்கப்படுகிறது என்று இங்கு தள்ளி விட்டனர். கடந்த 2020-ம் ஆண்டு ரயில்வே வாரியம் இந்த கன்னியாகுமரி - திப்ருகர் வாராந்திர ரயிலை வாராந்திர ரயில் சேவையிலிருந்து தினசரி ரயிலாக மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தது. இதன்படி கடந்த 2023-ம் ஆண்டு முதல் படிப்படியாக சேவைகள் அதிகரித்து தற்போது தினசரி ரயிலாக இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து தற்போது இயக்கப்படும் திப்ருகர் ரயில் கேரளா வழியாக சுற்றி செல்வதால் குமரி மாவட்ட பயணிகள் இந்த ரயிலில் பயணிப்பதை தவிர்கின்றனர். இந்த ரயில் பற்றி குமரி மாவட்ட மக்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. குமரி மாவட்ட பயணிகள் மாலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்ல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய வேண்டி நடைமேடையில் நிற்கும் போது, ஓரு முழு ரயிலின் அனைத்து பெட்டிகளும் காலியாக அதன் ஜன்னல் கதவுகள் முழுவதும் மூடி கொண்டு ஒருவித கெட்ட மணத்துடன் வந்து நிற்பதை பார்த்திராதவர்களே இருக்க முடியாது. ஒரு சில பயணிகள் இந்த ரயில்தான் சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் என்று ஏறி ஏமாந்தவர்களும் உண்டு. குமரி மாவட்ட மக்கள் சென்னை செல்ல பயணசீட்டு கிடைக்காமல் இருக்க, முழு ரயிலும் காலியான இந்த ரயில் இவ்வாறு ஏன் இயக்கப்படுகின்றது என்று அனைவரது மனதிலும் கேள்வி இயற்கையாகவே எழும்புகின்றது.
மதுரை, சென்னை வழியாக இயக்க கோரிக்கை:
சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள இருப்புபாதை இருவழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டு விட்டன. இந்த நிலையில் இந்த கன்னியாகுமரி – திப்ருகர் இயக்கப்படும் தினசரி ரயிலை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை வழியாக இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது. இந்த ரயிலை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்கும் போது குமரி மாவட்ட பயணிகள் தங்கள் தலைநகர் சென்னைக்கு செல்ல ரயில்சேவை கிடைக்கும். இவ்வாறு சென்னை வழியாக இயக்கும் பட்சத்தில் சுமார் 250 கி.மீக்கு குறைவான கட்டணம் செலுத்தி குறைந்த பயணநேரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு பயணிக்கலாம்.
இது மட்டும் இல்லாமல் குமரி மாவட்ட பயணிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல ஒரு ரயில் சேவையும், தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களை சார்ந்த பயணிகளுக்கு வடகிழக்கு மாநிலங்களை சார்ந்த பகுதிகளுக்கு செல்ல நேரடி ரயில் சேவையும் கிடைக்கும். தற்போது சென்னையை தவிர தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களிலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல எந்த ஒரு நேரடி ரயில் சேவையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
பராமரிப்பு:
கன்னியாகுமரி – திப்ருகர் ரயில் 2000 கி.மீக்கு மேல் பயணம் செய்யும் ரயில் என்பதால் கன்னியாகுமரி மற்றும் திப்ருகர் என இரண்டு இடங்களிலும் பிட்லைன் பராமரிப்பு செய்ய வேண்டியுள்ளது. இந்த ரயில் மாலையில் கன்னியாகுமரி வந்துவிட்டு காலிபெட்டிகள் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு பராமரிப்புக்கு என கொண்டுவரப்படும். இவ்வாறு வந்த பெட்டிகள் பராமரிப்பு பணிகள் நிறைவுபெற்று மீண்டும் மதியத்துக்கு கன்னியாகுமரி கொண்டு செல்லப்பட்டு பின்னர் கன்னியாகுமரியிலிருந்து திப்ருகர் ரயிலாக இயங்கும். இந்த ரயிலுக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பகல்நேரத்தில் பிட்லைன் பராமரிப்பு தினசரி செய்யப்படும்.
இவ்வாறு செய்வதால் குமரி மாவட்ட பயணிகள் நலனுக்காக புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும்போது, பிட்லைன் இடநெருக்கடியாக இருக்கின்ற காரணத்தால் புதிய ரயில்கள் இயக்க முடியாமல் போகும். குறிப்பாக 2000 கி.மீக்கு மேல் இயங்ககூடிய ரயில்களான கன்னியாகுமரி – நிசாமுதீன் திருக்குறள் ரயில் தினசரி ரயிலாக மாற்றம் செய்து இயக்குதல், கன்னியாகுமரி - ஹவுரா ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தினசரி ரயிலை கொச்சுவேலியுடன் நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக எங்கள் மாநிலத்தின் தலைநகரான சென்னையிலிருந்து திப்ருகருக்கு இயக்கப்படும் வாராந்திர ரயிலை விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கிறோம்.
குமரி எம்.பி உடனடி நடவடிக்கை
இந்த கன்னியாகுமரி – திப்ருகர் ரயிலை வழித்தடம் மாற்றம் செய்து இயக்க கன்னியாகுமரி எம்.பி உடனடியாக தலையிட்டு ரயில்வே அமைச்சரை சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ரயில் மறியல் போராட்டம் செய்தாவது குமரி மாவட்ட பயணிகள் பாதிக்கும் இந்த ரயில்கள் இயக்கத்தை தடுத்த நிறுத்த வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.