மயிலாடுதுறை அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினரிடம், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு நபர் தினசரி பத்திரிகை ஒன்றின் அடையாள அட்டையை காட்டி தப்பிக்க முயன்றபோது போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் ரயில் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்க அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை நடத்த ரயில்வே இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் வன்னியபெருமாள் ரயில்வே போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை அடுத்து, திருச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி அறிவுறுத்தலின்பேரில் மயிலாடுதுறை இருப்பு பாதை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கொள்ளிடம் ரயில் நிலையத்துக்கும், சீர்காழி ரயில் நிலையத்துக்கும் இடையே கச்சிக்குடாவில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு விரைவு வண்டியில் (வண்டி எண்:07191) இருப்புப்பாதை போலீஸார் மற்றும் போதைப்பொருள் மற்றும் நுண்ணறிவு போலீஸார் இணைந்து தீவிர சோதனை நடத்தினர்.
/indian-express-tamil/media/post_attachments/b5f485a6-e7f.jpg)
அப்போது, பயணிகள் இருக்கையின் கீழ் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பைகளை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது அந்த பைகளில் தலா 8 கிலோ வீதம் மொத்தம் 16 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு 1,60,000 ரூபாய் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, கஞ்சா இருந்த பைகளை கைப்பற்றி, அந்த சீட்டில், பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுக்கா முசுவனுத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் 33 வயதான முத்துசெல்வம் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் நாளிதழ் ஒன்றில் (தினமடை) நிலக்கோட்டை தாலுக்கா நிருபராக பணியாற்றுவதாகவும், தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கத்தில் நிலக்கோட்டை செயலாராக உள்ளதாகவும் இருவேறு அடையாள அட்டைகளைக் காட்டியுள்ளார்.
அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு அவரை மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் வண்டியில் இருந்து இறக்கி காவல் நிலையம் கொண்டு சென்று, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட முத்துசெல்வத்தை நாகப்பட்டினம் போதைப்பொருள் மற்றும் நுண்ணறிவு வசம் ஒப்படைத்தனர். செய்தியாளர் அட்டையுடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்