க. சண்முகவடிவேல்
Trichy: புதுக்கோட்டையை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 39). இவர் திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாதுகாப்பு படை காவலராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் குடும்பத்துடன் திருச்சி கே. கே. நகர் ஓலையூர் ஆரண்யா நகர் அப்துல் கலாம் தெரு பகுதியில் வசித்து வந்தார்.
/indian-express-tamil/media/post_attachments/b088d986-0b4.jpg)
நேற்று இரவு பணிக்கு வந்திருந்த அவருக்கு 1-வது பிளாட்பாரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மஞ்சுநாத் திடீரென 2-வது பிளாட்பார்முக்கு சென்றார். அப்போது கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
பின்னர் அந்த ரயில் பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது திடீரென்று மஞ்சுநாத் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அடுத்த அடுத்த நொடி அவரது உடல் மீது ரயில் சக்கரம் ஏறி இறங்கி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ரயில் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த சக ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.
இதற்கிடையில், தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பிறகு 21 குண்டுகள் முழங்க ரயில்வே பாதுகாப்பு படை வீரரின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. மஞ்சுநாத் தற்கொலை செய்துகொண்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“