திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி இன்று (பிப்.14) காலை மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. காலை நேரம் என்பதால் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இதில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரியில் படிக்கும் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயணம் செய்தனர். பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகே மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஒரு பெட்டியில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் தரமாறியாக தாக்கிக் கொண்டனர். இதனை கண்டு அங்கிருந்த பயணிகள் அச்சமடைந்து அலறினர்.
சிறிது நேரத்தில் ரயில் பட்டரவாக்கம் ரயில் நிலையம் வந்ததும் ரயில் நின்றது. ரயிலில் இருந்து இறங்கிய பச்சயைப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கினர். தகவல் அறிந்து பெரம்பூர் ரயில்வே போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 3 மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரயில்வே போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே எப்போது தகராறு, மோதல்கள் ஏற்படும். குறிப்பாக ரூட் தல விவகாரத்தில் பல ஆண்டுகளாகவே பிரச்சனை இருந்து வருகிறது.
இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் எனக் கூறி ரயில்வே போலீசார் இரண்டு கல்லூரி நிர்வாகத்திற்கும் கடிதம் எழுதியுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் முகவரியை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“