ரயில்களில் மோதலில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்த 4 ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்த மாநில கல்லூரி மாணவரை மற்றொரு கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாணவரை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விவகாரத்தில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடும் தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டப்பிரிவுகளில் ரயில்வே காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இனி வரும் காலங்களில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடாமல் இருக்கும் வகையில், ரயில்வே காவல்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எழும்பூர் ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் சென்ட்ரல் ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு கர்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
கடந்த 4 ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவரை மற்றொரு கல்லூரியை சேர்ந்த 5 பேர் வழிமறித்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் உயிரிருக்கு ஆபத்தான நிலையில் மாணவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட 5 மாணவர்களை கைது செய்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மோதல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகமும் சஸ்பெண்ட் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கல்லூரி நிர்வாக ரீதியாகவும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே காவல்துறை தீவிரமாக செயல்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து, மின்சார ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கல்லூரி மாணவர்கள் செல்லும்போது பேசின் பிரிட்ஜ் சந்திப்பில் ஒரே நேரத்தில் ரயில்கள் நிற்கிறது. அந்த நேரத்தில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொள்கின்றனர். இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகத்தை அணுகி குறிப்பிட்ட ரயில்களை தாமதமாக இயக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
புதிய சட்டத்தின் அடிப்படையில் மோதல்களில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து சி.சி.டி.வி. கேமரா, செல்போன் வீடியோ உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் இருந்தாலே வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை உள்ளது. ரயில் நிலையங்கள் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் இருப்பதால் பிரச்சினைகளில் ஈடுபடும் மாணவர்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய சட்டப்பிரிவுகளின் அடிப்படையில், கல்லூரி மாணவர்கள் இதுபோன்று மோதலில் ஈடுபட்டால், 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைக்கும் வகையிலான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். ஏற்கெனவே, தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மோதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு பல்வேறு விதமாக அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மோதல்களில் ஈடுபடுவதால், இதுபோன்று கடும் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“