மண்டபத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் பாம்பன் கடல் பாலத்தில் ரயில்களை 50 கி.மீ. வேகத்தில் இயக்கலாம். அதே நேரத்தில் ,மண்டபம் - ராமேஸ்வரம் வழியில் கடல் அல்லாத இடைப்பட்ட பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் புதிய கடல் பாலம், இந்திய ரயில்வேயின் பொறியியல் திறமைக்கு சான்றாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 1914-ஆம் ஆண்டு ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில், மண்டபத்திலிருந்து பாம்பன் கடலில் ஆங்கிலேயர் காலத்தில் ரயில் பாலம் கட்டப்பட்டது. 110 ஆண்டுகளைக் கடந்த நிலையில், கடல் அரிப்பு, அவ்வப்போது ஏற்படும் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அப்பாலத்தில் ரயில்கள் செல்வது நிறுத்தப்பட்டு, பழைய பாலம் கைவிடப்பட்டது.
இந்தநிலையில், சுமார் 550 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் பாலம் கட்ட ரயில்வே அமைச்சகத்தால் முடிவு செய்யப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. ஆர்.வி.என்.எல் எனும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் என்ற நிறுவனத்தால் புதிய பாம்பன் பாலம் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
ஆர்.டி.எஸ்.ஓ எனப்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் பாலத்திற்குரிய அனைத்து தளவாடங்களும் உருவாக்கப்பட்டன.
/indian-express-tamil/media/post_attachments/d69a4626-554.jpg)
கடலுக்குள் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலம் என்ற பெருமையோடு பாம்பன் ரயில் பாலத்தில் ஏறக்குறைய அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த நவம்பர் 13-14 ஆம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் கட்டுமானத்தின் தரம், தாங்கு தூண்களின் நிலைத்தன்மை, கர்டர்களின் வலு ஆகியவை குறித்து முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டார். நவம்பர் 14 ஆம் தேதி பாம்பன் புதிய பாலத்தில் 80 கி.மீ. வேகத்திலும், மண்டபம்-ராமேஸ்வரம் பகுதிகளில் 90 கி.மீ. வேகத்திலும் ரயிலை இயக்கி வேகப் பரிசோதனையும் மேற்கொண்டார்.
இந்நிலையில் இந்திய ரயில்வே வாரியத்தின் செயலாளருக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி அனுப்பியுள்ள கடிதத்தில், ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், பாம்பன் புதிய பாலத்தில் மணிக்கு 50 கி.மீ. வேகத்திலும், மற்ற பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்திலும் இயக்கலாம் என பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பழைய ரயில் பாலம் பயன்பாட்டில் இருந்த போது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் தான் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படுவது அறிந்த சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி உடன் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“