இனி குழப்பம் வேண்டாம்: தமிழ் மொழியிலும் ரயில்வே டிக்கெட்டுகள்

ரயில்வே டிக்கெட்டை பார்த்து அடிக்கடி முழி பிதுங்கியுள்ளீர்களா? சில சமயம் நம்ம டிக்கெட் சரியானதுதானா? சரியான ரயிலில் தான் நாம ஏறியிருக்கிறோமா? என சந்தேகம் ஏற்படுமா உங்களுக்கு? இனிமே உங்களுக்கு அதைப்பற்றிய கவலை வேண்டாம். தென்னக ரயில்வே டிக்கெட்டுகளில் இனி தமிழ் மொழியும் இடம்பெறும் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இந்திய ரயில்வே பயணிகள் மேம்பாட்டுக்குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினரான தமிழகத்தை சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி, ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டத்தில் எடுத்துரைத்தார். அப்போது, தமிழ்நாட்டில் தமிழ் தவிர்த்து மற்ற மொழிகள் தெரியாத மக்கள் ரயிலில் பயணம் செய்யும்போது சந்திக்கும் இன்னல்களை விளக்கியதாக தெரிகிறது.

ஆரம்பத்தில், ஒரு மாநில மொழியை மட்டும் டிக்கெட்டுகளில் முன்னுரிமை கொடுப்பதற்கு அதிகாரிகள் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், டிக்கெட்டுகள் அச்சிடுவதற்கான மென்பொருளிலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதால் அதிகாரிகள் இதற்கு தயக்கம் காட்டியுள்ளனர்.

ஆனால், மென்பொருளில் மாற்றம்செய்வது பெரும் விஷயமல்ல என ஆசீர்வாதம் ஆச்சாரி எடுத்துரைத்த பிறகு, தென்னக ரயில்வே டிக்கெட்டுகளில் தமிழ் மொழியும் இடம்பெற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மென்பொருளை மாற்றியமைத்து, 2018-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த முடிவு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், மாநில வாரியாக அந்தந்த மாநில மொழிகளையும் டிக்கெட்டுகளில் இடம்பெற செய்யவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் இயங்கும் ரயில்களில் இந்தி, ஆங்கிலமும், செகந்திராபாத்திலிருந்து கிளம்பும் ரயில்களில் இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிகளும், சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ரயில்களில் இந்தி, ஆங்கிலம் அத்துடன் தமிழ் மொழியும் இடம்பெற்றிருக்கும்.

இந்திய ரயில்வே பயயணிகள் மேம்பாட்டுக் குழுவின் இந்த முடிவுக்கு மொழி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

×Close
×Close