தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றே கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் இறுதி வாரத்தில் இருந்தே வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் முதலாக உருவான சிட்ராங் புயல் தமிழகத்தை தவிர்த்து விட்டு வங்கதேசம் நோக்கிச் சென்றாலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பெரும் மழையை தந்துவிட்டே சென்றது.

இந்நிலையில், வங்கக்கடலில் அடுத்த புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நவம்பர் 9-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், அது வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இதனை ஒட்டி நாளை முதல் நவம்பர் 11-ம் தேதி வரை தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், நவம்பர் 14-ம் தேதி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இரண்டு நாட்கள் முன்னதாகவே நேற்று 7-ம் தேதி நள்ளிரவில் இருந்தே டெல்டா மாவட்டங்களான கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் நேற்று நள்ளிரவுக்கு மேல் மழை தொடங்கி விட்டுவிட்டு பெய்து வரும் நிலையில், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடனே காணப்படுகின்றது. எந்த நேரமும் மழை கொட்டலாம் என்ற நிலையில் பொதுமக்களும், சாலையோர கடைகள் நடத்துபவர்களும் ஒருவித பதட்டத்துடனேயே நேரங்களை கடக்கின்றனர்.
திருச்சி உள்பட டெல்டா மாவட்டங்களின் மழை பொழிவு சில பகுதிகளில் இரண்டு நாட்களும், பல இடங்களில் ஒரு நாளும் இடைவெளி விட்டிருந்த நிலையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளதால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“