இன்றைய தினம் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ஆம் தேதி முதல் பெய்து வருகிறது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
மேலும், நாளை ’டானா’ புயலாக உருவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தீவிர புயல் சின்னமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25-ஆம் தேதி அதிகாலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஒடிசா பூரி - சாகர் தீவு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
இதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“