அரபிக்கடலில் உருவான புயலுக்கு ‘மகா’ புயல் என பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள புயல் நாளை தீவிர புயலாக மாறும் எனவும் லட்சத்தீவில் இருந்து 25 கி.மீ வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகா புயலால் காற்றின் வேகம் 95 கி.மீட்டரில் இருந்து 110 கி.மீட்டராக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் க்யார் புயல் உருவாகியுள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக புயல் உருவாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீட்டர் தூரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் மகா புயல் மையம் கொண்டுள்ளது
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை முடிந்து, அக்டோபர் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. ஒரு வாரம் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஆனால் அதன்பிறகு மழையளவு பெருமளவு குறைந்துவிட்டது. இந்த சமயத்தில்தான், இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மையம் கொண்டுள்ளது.
திருவனந்தபுரத்திலிருந்து தென் மேற்கே 220 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை, குமரி, நெல்லை, ராம்நாட், விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி ,அரியலூர் ,பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை ,நீலகிரி, தேனி, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குமரி கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பாம்பனில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று மீன்பிடிக்க சென்ற 9 படகுகளில் 3 படகுகள் கரை திரும்பி உள்ளனர். மதுரை, சென்னை, கோவை , பெரம்பலூர், அரியலூர், கரூர் எ ஒட்டுமொத்த தமிழகமும் மழையால் குளிர்ந்து வருகிறது.