தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் அளவு நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாளை முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை. அதேபோல திருப்பத்தூரில் 36.6 டிகிரி செல்சியஸ் என அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33-37° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 30-34° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். பிப்.25 முதல் மார்ச் 1 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 25 முதல் 27 வரை ஆகிய மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும்.
இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 25 முதல் 27 வரை அதற்கடுத்த மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி காணப்படும்.
இன்று பிப்ரவரி 24 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று முதல் 27 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தவகையில் தமிழ்நாட்டில் பிப்ரவரி 28 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.