ஃபீஞ்சல் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசின் குழுவினர் இன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபீஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பிட்ட மாவட்டங்களில் தமிழக அரசு சார்பாக நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதனிடையே, ஃபீஞ்சல் புயலால் தமிழகத்தில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டதாகக் கூறி மத்திய அரசு சார்பில் ரூ. 2000 கோடி நிவாரண தொகையை உடனடியாக அளிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், பாதிப்புகள் குறித்து தகவல்களை சேகரிக்க மத்திய அரசின் குழுவையும் தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து, புயல் பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக ஸ்டாலினிடம் மோடி கேட்டறிந்தார்.
அதனடிப்படையில், புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழுவினர் இன்று (டிச 6) மாலை சென்னைக்கு வருகை தருகின்றனர். மத்திய உள்துறை இணைச்செயலர் ராஜேஷ் குப்தா தலைமையிலான இக்குழுவில், பொன்னுசாமி, சோனமணி ஹேபம், சரவணன், தனபாலன் குமரன், ராகுல் பச்கேட்டி மற்றும் பாலாஜி ஆகிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் நாளை (டிச 7) காலை முதல் ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“