சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று இரவுக்குள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேஸ்புக்கில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காலை 11 மணிக்கு வரை வெயில் மற்றும் அதன்பின் நிலவும் வெப்பம் , மேற்கு நோக்கி வீசும் காற்று, நல்ல ஈரப்பதம் ஆகிவை மழைக்கு சாதகமான அம்சத்தை கொண்டுள்ளன.
இன்று மாலை அல்லது இரவுக்குள் கேடிசி(KTC) பெல்ட் எனப்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு உண்டு.
குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, நாகை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவுக்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய அதிகமான சாத்தியங்கள் உள்ளன.
அதேபோன்று, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் பகுதி, கோவை முதல் மேட்டுப்பாளையம், ஈரோடு முதல் சத்தியமங்கலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, சேலம், நாமக்கல், திண்டுக்கல், கடலூர் மாவட்டத்தில் சில பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கங்களிலும் இன்று இரவுக்குள் மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் 120மி.மீ, புதுக்கோட்டையில் 108மிமீ, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 100 மி.மீ, விருதுநகரில் 96 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
திருச்சி நகரில் 74மி.மீ, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 70மி.மீ, திருச்சி ஜங்ஷன் 70மி.மீ, பொன்மலை 56மி.மீ, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் 55மி.மீ, திருப்பத்தூரில் 54மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.