தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29-ம் தேதி தொடங்கி மழை பெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை நீடிக்கிறது. மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஆங்காங்கே மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக 2 மனித உயிரிழப்புகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மனித உயிரிழப்பு என மொத்தம் 3 மனித உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதுவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் வேரோடு சாய்ந்த 64 மரங்கள் அகற்றப்பட்டன.
அதேபோல் மழை காரணமாக 25 கால்நடைகள் இறந்துள்ளன. 140 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 763 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன.
மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் 250 நீர் இறைப்பான்கள் பயன்படுத்தப்பட்டு மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2 நிவாரண மையங்களில் 35 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண தொகை வழங்கினர்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பொதுப்பணித்துறையின் கூற்றுப்படி, தமிழகம் முழுவதும் உள்ள 14,138 நீர்நிலைகளில் கிட்டத்தட்ட 2,480 குளங்கள் நிரம்பியுள்ளன. 2,065 குளங்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளன. 2,799 நீர்நிலைகளில் 51 சதவீதம் நிரம்பியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil