கோவையில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் இருவரும் அவிநாசி மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மழையின் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 12) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
Advertisment
கோவையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. கோவை மாநகராட்சி பகுதிகளை பொறுத்தவரை பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் தேங்கி உள்ள மழை நீரையும் அம்மழை நீர் வெளியேற்றும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து கிக்கானிக் பாலம் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவில் செய்து முடிக்க மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாளை பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து கோவை மாவட்டத்தில் நாளை ஒரு நாள் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"