வரலாறு காணாத கனமழையை அடுத்து நிவாரண பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் முத்துசாமி, ஆர்.ராஜேந்திரன் ஆகியோரை பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் ஃபீஞ்சல் புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. ஃபீஞ்சல் புயல் கரையை கடந்த நிலையிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடந்த 2 நாட்களாக கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் விழுப்புரம், கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை பெய்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மயிலையில் 51 செ.மீ மழை, ஊத்தங்கரையில் மட்டும் 50 செ. மீ பதிவு பதிவானது.
இதனால் சாலைகள் மற்றும் வீடுகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி, தருமபுரியில் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை துரிதமாக வழங்க பொறுப்பு அமைச்சர்களாக அமைச்சர்கள் முத்துசாமி, ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு முத்துசாமி, தருமபுரி மாவட்டத்துக்கு ராஜேந்திரன் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை எடுக்கவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“