தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் (ஏப்.7-ல்) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடமேற்கில் நகர்ந்து இன்று (ஏப்.8) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளையும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடைய கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 13-ம் தேதி வரை மழை தொடரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும், ஏப். 9 முதல் 13 வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35C-36C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27C-28C ஆகவும் இருக்கும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசா-மேற்கு வங்கத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதால், நிலங்களிலிருந்து காற்று வீசக்கூடும் என்றும், இது வெப்பநிலை அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர். "ஏப்.10 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2C-3C அதிகமாக இருக்கும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, (ஏப்.7) திங்களன்று, சென்னையில் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் இயல்பை விட 35.5C மற்றும் 35.7C ஆக வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 1.2C மற்றும் 0.4C ஆக பதிவாகியுள்ளன. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை 38.6C ஆக பதிவாகியுள்ளது.