சென்னையில் பலத்த காற்றுடன் மழை : சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று பிற்பகல் முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வருகிற அக்டோபரில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்துள்ளது. சென்னையில் அம்பத்தூர், ஆவடி, முகப்பேர், கோல்டன் பிளாஸ், கலெக்டர் நகர், அயப்பாக்கம், அன்னனூர், அத்திப்பட்டு, ஐசிஎப் காலணி, திருமங்கலம், வாவின், வானகரம், காட்டுப்பாக்கம், கீழ்ப்பாக்கம், புழல், மதுரவாயல், பூந்தமல்லி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலை, கோயம்பேடு, வடபழனி, திருவொற்றியூர், வளசரவாக்கம், ஐயப்பந்தாங்கல், தி.நகர், சைதாப்பேட்டை, ராயபுரம், பாரிமுனை, தண்டையார்பேட்டை, ரெட்டேரி, செங்குன்றம், எண்ணூர் ஆகிய பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது.
30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த மழையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சென்னை வானிலை ஆய்வு மையம் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என தகவல் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.