சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு (ஆக.31) சூறைக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று இரவு 8 மணி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. குறிப்பாக, சென்னை நகரில் வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சேத்துப்பட்டு, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
மேலும், முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி கோயம்பேடு, முகப்பேர், போரூர், மதுரவாயல், வானகரம், தாம்பரம், மேடவாக்கம், திருவான்மியூர் பகுதிகளிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தொடர்ந்து ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் சாலைகளிலும் மழை நீர் தேங்கியது. ஃபார்முலா 4 கார் பந்தயம் தீவுத்திடலில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
இடி, மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் 9 வருகை விமானங்கள் மற்றும் 10 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 19 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. வானிலை சீரானதும், வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த விமானங்கள் ஒவ்வொன்றாக தரையிறங்கின.
இன்றும் மழை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதால், இன்று வட தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“