தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று தெரிவித்துள்ளது.
இதேபோன்று வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், நாகை, அரியலூர், திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல், தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது பதிவில், "தொடர்ந்து இரண்டாவது நாளாக அரிதான காலை மழை பெய்து கொண்டிருக்கிறது. இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அதாவது, மேகங்கள் வேகமாக கலைந்து செல்லவில்லை. எனவே மழை நின்னு அடிக்கும். 2013ம் ஆண்டுக்குப் பிறகு, சென்னை நகரில் பகல் பொழுதில் கடும் மழை இப்போது தான் பெய்திருக்கிறது.
வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் மிக நல்ல மழை பெய்துள்ளது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பாண்டி ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
இன்று அதிகாலை தென் சென்னையில் நல்ல மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் தற்போது மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. நள்ளிரவு பொழுதில் கூடிய மேகங்கள் நகராமல் அப்படியே நிலை பெற்றுள்ளன. ஏலகிரி, ஆம்பூர், வாணியம்பாடியில் சூழ்ந்த மேகங்கள் கலைந்து செல்லாமல், வலு குறையாமல் காட்சி அளிக்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.