தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலுக்கு மத்தியில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று கோவை மாவட்டத்தில் உக்கடம், கவுண்டம்பாளையம், காந்திபுரம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கி நின்றதால் அவ்வழியாக வந்த கார் ஒன்று மேம்பாலம் அடியில் சிக்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

மேலும், கனமழையால் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாய்கள் நிறைந்து, கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது. சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை ஓரத்தில் கழிவு நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் டேங்கர் லாரிகள் மூலம் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை சீர் செய்து, தேங்கிய நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
செய்தி: பி.ரஹ்மான். கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“