தமிழகத்தில் கனமழை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்ததால், தமிழகத்துக்கு இன்று விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் திரும்பப்பெறப்பட்டது.
அதேநேரத்தில் நாளை வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, அவிநாசி உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது. நொய்யலில் நீர் வரத்து அதிகரித்ததால் அணைப்பாளையம் பகுதியில் தரைப்பாலம் மூழ்கியது.
நொய்யல் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் இரவு 7 மணி முதல் கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பல இடங்களில் கனமழை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் வெயில் அடித்து வந்த நிலையில் இரவில் மழை பெய்தது.
துாத்துக்குடி நகரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலான மழை இரவு முழுவதும் நீடித்தது.
மழையின் காரணமாக பல இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், சுசீந்திரம், தோவாளை, கன்னியாகுமரி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லையில் நேற்று இரவு முழுவதும், பாளை, பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.
கடலூரில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, ராயப்பேட்டை, மெரினா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வாக உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் சென்னையில் சில இடங்களில் அதிகாலை சாரல் மழை பெய்தது. இதனை சென்னைவாசிகள் வெகுவாகவே ரசித்தனர்.