தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
அந்தவகையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 29) அதிகாலை பரவலாக மழை பெய்தது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மாம்பலம், பல்லாவரம், எழும்பூர், புரசைவாக்கம், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 மாவட்டங்கள்
வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர்.தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, துாத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சமாக, 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, தேன்கனிக்கோட்டையில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“