/indian-express-tamil/media/media_files/2iKNJQcT4rrjCjcwOGv6.jpg)
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று மிக்ஜாம் புயலாக மாறியுள்ளது. இந்த புயல் இன்று (டிச.4) சென்னை வழியாக ஆந்திரா கடற்கரை சென்று நாளை (டிச.5) நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை கரையைக் கடக்கிறது.
புயல் கரையை கடக்கும் போது 110 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில் மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிக்ஜாம் புயல் நேற்று பிற்பகல் 7.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கி.மீ கிழக்கு - தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கி.மீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கி.மீ தெற்கு - தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வலுவடைந்து 4.12.23 திங்கட்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அலுவலர், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு ஐ.ஏ.எஸ் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மீட்புப் பணிகள் மற்றும் பிற உதவிகளுக்கென 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1913 (சென்னை மாநகராட்சி), 18004254355, 18004251600 (தாம்பரம் மாநகராட்சி) மற்றும் 18004255109ஐ (ஆவடி மாநகராட்சி) தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.