/indian-express-tamil/media/media_files/2025/10/14/tenkasi-2025-10-14-17-52-16.jpg)
குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - குளிக்கத் தடை
Today Latest News Updates: பருவமழை தொடங்க உள்ளதை தொடர்ந்து நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை ஒரு வாரத்துக்கு தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார். இந்த இடைபட்ட ஒரு வாரத்தில் கடலோர மாவட்டங்களில் அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரையிலும், காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், உள் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவாகக் கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
குமரிக்கடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகி, 17, 18-ந்தேதிகளில் லட்சத்தீவு கடல் பகுதியில் தாழ்வுப் பகுதியாக மாறி, வலுவடைந்து தமிழக கடற்கரையை விட்டு அரபிக்கடல் பகுதியை நோக்கி நகர இருக்கிறது. இதன் காரணமாக மேற்கு மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 17, 18-ந் தேதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- Oct 14, 2025 18:35 IST
18 நாட்களுக்குப் பிறகு முட்டை கொள்முதல் விலையில் மாற்றம்
நாமக்கல்லில் 18 நாட்களுக்குப் பிறகு முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் அதிகரித்து ரூ.5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Oct 14, 2025 17:57 IST
வாகன புகை பரிசோதனை மையத்தில் ரூ.1.12 லட்சம் பறிமுதல்
திண்டுக்கல் வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வாகன புகை பரிசோதனை மையத்தில் ரூ.1.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. லட்சம் வாங்கியதாக இடைத்தரகர்கள் பாண்டியராஜ் (34), அஜய்ஜான்சன்(25) வைத்து ஆர்டிஓ இளங்கோவன் லட்சம் பெறுவதாக திண்டுக்கல் லட்ச ஒழிப்புத் துறைக்கு புகார் செய்தனர். 11 பேர் கொண்ட லட்ச ஒழிப்புத் துறையினர் வத்தலக்குண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- Oct 14, 2025 17:55 IST
திருச்செந்தூர்: கந்தசஷ்டி விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதில் முக்கியமான கந்தசஷ்டி திருவிழா வருகிற 22-ந் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவிழா நாட்களில் தங்கியிருந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் ஆங்காங்கே தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் கடற்கரை பகுதியை சுத்தம் செய்யும் பணி, கடற்கரை மணலை சமன்படுத்தும் பணி, மின் விளக்குகள் பொருத்தும் பணி, பந்தல், பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
- Oct 14, 2025 17:54 IST
போக்சோ வழக்கில் கைதான நபர் தற்கொலை - விசாரணை
போக்சோ வழக்கில் கைதான நபர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் (30) போக்சோ வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
- Oct 14, 2025 17:53 IST
குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - குளிக்கத் தடை
தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Oct 14, 2025 17:38 IST
எல்.எண்டத்தூர் ஊராட்சியில் 10 ஆயிரம் பனை விதை நடவு
மதுராந்தகம் உத்திரமேரூரில் செயல்பட்டுவரும் டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில், ஆண்டுதோறும் சுற்று வட்டார பகுதிகளில் பனை விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் எல்.எண்டத்தூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நண்பர்கள் நற்பணி மன்றமும் இணைந்து கிளியாற்றங்கரையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- Oct 14, 2025 17:09 IST
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 7 பெண்களுக்கு மூச்சுத்திணறல்
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணிக்காக 50க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர். கெமிக்கல் மருந்தை ஊற்றி சுத்தம் செய்தபோது திடீரென அறுவை சிகிச்சை அரங்கம் முழுவதும் லேசான புகை ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் 4 பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அரங்குக்கு வெளியே இருந்த பணியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக 7 பேரும் உள்ளே சென்றனர். அப்போது அவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- Oct 14, 2025 17:08 IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 17 அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 17 அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், கரூர் ஆட்சியர், கரூர் எஸ்.பி. உள்ளிட்ட 17 அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் வெண்ணெய்மலை முருகன் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றம் தொடர்ச்சியாக பல உத்தரவுகளை வழங்கியும் எந்த பலனும் இல்லை என ஐகோர்ட் கிளை தெரிவித்தது. அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- Oct 14, 2025 16:58 IST
கஞ்சா போதையில் பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல்
விழுப்புரம் மாவட்டம், விடூர் அணைக்கு வந்த பொதுமக்கள் மீது கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. மரம் வெட்டும் கத்தியால் நான்கு பேரை ஓட ஓட வெட்டிய அந்தக் கும்பல், அவர்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தையும் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
- Oct 14, 2025 16:54 IST
மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
- சென்னை வானிலை ஆய்வு மையம்
- Oct 14, 2025 16:52 IST
த.வெ.க மாவட்ட செயலருக்கு ஜாமீன்
திண்டுக்கல் தவெக தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. முதல்வர் மற்றும் நீதிபதி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கடந்த 2 நாட்களுக்கு முன் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டார்
- Oct 14, 2025 16:22 IST
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த கஸ்தூரி ராஜா (23) என்ற இளைஞர், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்னர், கடன் பிரச்சனையால் தான் இறக்கப்போவதாக அவர் தனது வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளார்.
- Oct 14, 2025 15:35 IST
ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஏ.டி.எம். கொள்ளை வழக்கில், கொள்ளையர்களை சினிமா பாணியில் துரத்திப் பிடித்த விவகாரம் தொடர்பாகத் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின்போது ஒரு கொள்ளையர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், பிடிபட்ட ஆறு வடமாநில கொள்ளையர்களுக்குத் திருச்செங்கோடு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில், இரண்டு பேருக்குத் தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மீதமுள்ள நான்கு பேருக்குத் தலா 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
- Oct 14, 2025 15:26 IST
பள்ளிக்கு விடுமுறை அளித்து உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்தூர் பகுதியில் இன்று அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் சிறப்பு அனுமதி பெற்று முகாம் நடத்துவதற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக கூறினார்
- Oct 14, 2025 15:25 IST
சேறும் சகதியுமாக நெல் கொள்முதல் நிலைய வளாகம்
கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக இருப்பதால், அங்கு நெல்லைக் கொண்டு வரும் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் உள்ளதோடு, கொள்முதல் பணியும் பாதிக்கப்படுவதால், விரைந்து வளாகத்தைச் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- Oct 14, 2025 14:59 IST
லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை - சூரம்ஹாரத்திற்கு தயாராகும் திருச்செந்தூர்
சஷ்டியை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்காலிக கூடாரங்கள் அமைப்பது, கடற்கரையில் மின் விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கியது.
- Oct 14, 2025 13:17 IST
நெல்லையில் காவல்நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் இருவர் கைது
நெல்லையில் காவல்நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே மூவர் கைதான நிலையில், அருண்குமார், ஹரிஹர சுதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- Oct 14, 2025 12:51 IST
சங்கரன்கோவில் அருகே ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடி ஆடுகள் விற்பனை
தீபாவளி பண்டிகையை ஒட்டி சங்கரன்கோவில் அருகே ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாம்புக்கோவில் சந்தையில் சுமார் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை ஆனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- Oct 14, 2025 12:14 IST
கோவை ஜி.டி.நாயுடு பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
கோவை ஜி.டி.நாயுடு பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை மாநகராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு மாநகராட்சி கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- Oct 14, 2025 11:50 IST
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை
அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை மற்றும் சுருளி அருவியின் ஆற்றுப்படுகை பகுதிகளில் பெய்த கன மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கம்பம் அருகே நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Oct 14, 2025 09:34 IST
மகளிர் குழுக்களின் கடன் தவணையில் ரூ.50 லட்சம் மோசடி
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள், மகளிர் குழுக்களின் கடன் தவணையில் ரூ.50 லட்சத்தை மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்குகள் முடங்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள், மணிஷா தலைமையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
- Oct 14, 2025 09:33 IST
அரசுப் பேருந்தை முந்த முயன்ற கண்டெய்னர் லாரி
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில், திரு நெய்பேர் அருகே அரசுப் பேருந்தை முந்த முயன்ற கண்டெய்னர் லாரி, புளிய மரத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தால் சாலை போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. வேறு வாகனங்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திருவாரூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Oct 14, 2025 09:33 IST
ஆடுகள் விற்பனை அமோகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அத்தியூர் வாரச்சந்தையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ரூ. 1.70 கோடிக்கு ஆடுகள் அமோகமாக விற்பனையானது. ஆடு ஒன்று ரூ. 5,000 முதல் ரூ. 15,000 வரை விலை போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- Oct 14, 2025 09:32 IST
அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு
தேனி சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. 126 அடி முழு கொள்ளளவு கொண்ட அணையில், 76 அடியாக இருந்த நீரின் அளவு 86 அடியாக உயர்ந்துள்ளது.
- Oct 14, 2025 09:17 IST
கரூர் துயரம் - விஜயை சந்தித்த என்.ஆனந்த்
கரூர் உயிரிழப்பு சம்பவத்துக்குப் பிறகு த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான நிலையில் நீலங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில் அவரை சந்தித்து ஆனந்த் பேசியுள்ளார். இந்த சந்திப்பு 20 நிமிடம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
- Oct 14, 2025 09:13 IST
ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வாளர் தகவல்
நாளை முதல் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை ஒரு வாரத்துக்கு தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார். மேலும், இது பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கான மழையாக இருக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.