சென்னையில் அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழை பெய்யும், டிசம்பர் 3, 4 தேதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்று தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ” அடுத்த 4 தினங்களுக்கு பொறுத்தவரையில் வடதமிழகம் மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழை பொருத்தவரையில் டிசம்பர் 1, 2 தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 3ம் தேதி திருவள்ளூர் , சென்னை தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
4ம் தேதி சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாட்டங்களில் கனமழையும், திருவள்ளூர் மாட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது. டிசம்பர் 3ம் தேதி திருவள்ளூர் தொடங்கி, கடலூர் வரையிலான வடகடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 4ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 வரை கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 80 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். கடலூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
அடுத்த வரும் 4 நாட்களில் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 780 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“