Chennai News Highlights: 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

Tamil Nadu Latest Live News Update in Tamil 31 August 2025: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest Live News Update in Tamil 31 August 2025: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
a

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், நீர் வரத்து விநாடிக்கு 250 கன அடியில் இருந்து 475 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் தற்போது 1.075 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. 

  • Aug 31, 2025 21:27 IST

    புதுச்சேரியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகையை தமிழ் உரிமை இயக்கத்தினர்

    புதுச்சேரி அரசுக்கு சொந்தமான மருந்தகத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகையை தமிழ் உரிமை இயக்கத்தினர் அடித்து உடைத்தனர்.  புதுச்சேரி அரசின் ஆணைப்படி பெயர்ப் பலகையை தமிழில் எழுதுக என முழக்கமிட்டனர்.



  • Aug 31, 2025 21:02 IST

    மோட்டார் ஸ்போர்ட் மற்றவர்கள் நினைப்பது போல் எளிதானது அல்ல: அஜித்

    மோட்டார் ஸ்போர்ட் மற்றவர்கள் நினைப்பது போல் எளிதானது அல்ல. அது உடல் மற்றும் மன ரீதியில் கடினமானது. ஜெர்மனியில் நடைபெறும் ஜி.டி.4 கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார் கருத்து



  • Advertisment
    Advertisements
  • Aug 31, 2025 20:03 IST

    நாடு முழுவதும் ரூ.206 கோடிக்கு மேல் மோசடி: மும்பையில் 2 பேர் கைது

    புதுச்சேரியை சேர்ந்த மகேஷ் குமார் என்பவரை மிரட்டி ஆன்லைனில் ரூ.4 லட்சம் பணம் பறித்ததாக எழுந்த புகாரின் அடிபபடையில், புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸ்மும்பை விமான நிலையத்தில் இணையவழி மோசடி மன்னர்கள் 2 பேரை கைது செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டு வந்த கண்குசரண் சிபரம் பணிகராகி (37), ஜகத் நாயக் (36) ஆகியோர்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாடு முழுவதும் ரூ.206 கோடிக்கு மேல் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்,வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.



  • Aug 31, 2025 18:47 IST

    பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சீன அதிபர் ஜின்பிங் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கடைசியாக உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் குழு புகைப்படம் ஜின்பிங் எடுத்துக்கொண்டார். 



  • Aug 31, 2025 18:05 IST

    விநாயகர் சிலை கரைப்பு

    சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள், ரை ஒதுங்கும் மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை உடனுக்குடன் சேகரித்து அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 



  • Aug 31, 2025 17:40 IST

    அரசுப் பள்ளியில் 37.9% மாணவர்கள்தான் - அண்ணாமலை

    அரசுப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டில் அரசுப் பள்ளியில் 37.9% மாணவர்கள்தான் படிக்கிறார்கள். 62.1% மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.



  • Aug 31, 2025 17:17 IST

    கண்டுகொள்ளாத காங்கிரஸ்?

    காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ள சசிகாந்த் செந்திலுக்கு தமிழக காங்கிரசின் முக்கிய தலைவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. மத்திய அரசு தமிழகத்திற்கான கல்வி நிதியை அளிக்க வேண்டி சசிகாந்த் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Aug 31, 2025 17:01 IST

    சென்னை பாலவாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டு வரும் விநாயகர் சிலைகள்

    சென்னை பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது. கரை ஒதுங்கும் விநாயகர் சிலைகளை ஹிட்டாச்சி உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கரை ஒதுங்கும் மரப் பலகைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.



  • Aug 31, 2025 16:47 IST

    தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்

    தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்றார். டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதையடுத்து, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.



  • Aug 31, 2025 16:37 IST

    8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, கோவை ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Aug 31, 2025 16:34 IST

    சென்னை பாலவாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டு வரும் விநாயகர் சிலைகள்

    சென்னை பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. கரை ஒதுங்கும் விநாயகர் சிலைகளை ஹிட்டாச்சி உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கரை ஒதுங்கும் மரப் பலகைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.



  • Aug 31, 2025 15:53 IST

    போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - விஜய்

    அமெரிக்காவின் 50% வரி விதிப்பு நடைமுறையால் தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்; ஏற்றுமதி தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தொழில் மற்றும் வேலைவாய்ப்பினைப் பாதுகாப்பதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் ( நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். 



  • Aug 31, 2025 15:42 IST

    எடப்பாடி பழனிசாமி மீது பிரேமலதா குற்றச்சாட்டு

    எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரேமலதா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார். எடப்பாடி பழனிசாமியை நம்பினோம்; ஆனால் ஏமாற்றிவிட்டார். எடப்பாடி பழனிசாமி தமது பிரச்சார கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருகிறார்.



  • Aug 31, 2025 15:11 IST

    பொறுப்பு டி.ஜி.பி நியமனம்: உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிரானது - அண்ணாமலை கண்டனம்

    பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை: “உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டி.ஜி.பி நியமனம் செய்திருக்கிறது தி.மு.க அரசு.

    மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, உச்சநீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டி.ஜி/பி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டி.ஜி.பி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது. சங்கர் ஜிவால் அவர்களைக் காவல்துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழக அரசுக்கும் தெரியும். 

    ஆனால், தமிழகத்தில் அத்தனை உயர் அதிகாரிகள் பதவியையும், அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது தி.மு.க அரசு. ஒரு சில காவல்துறை உயர் அதிகாரிகள், தி.மு.க வட்டச் செயலாளர்களைப் போல பேசுவதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில், அடுத்த காவல்துறை டி.ஜி.பி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டி.ஜி.பி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது தி.மு.க.

    காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் தி.மு.க அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்திக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.



  • Aug 31, 2025 14:56 IST

    பிரிக்ஸ் மாநாடு - சீன அதிபருக்கு மோடி அழைப்பு

    2026 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்



  • Aug 31, 2025 14:31 IST

    சென்னை கனமழை - கேட்டறிந்த ஸ்டாலின்

    முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், சென்னையில் பெய்த கனமழையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார். கனமழை காரணமாக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றிட முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்



  • Aug 31, 2025 14:14 IST

    சென்னையில் டீ-காபி விலை உயர்வு

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் டீ-காபி விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.12க்கு விற்கப்படும் டீ 15 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கு விற்கப்படும் காபி 18 முதல் 20 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் பால் மற்றும் காபி தூள் விலை உயர்வு காரணமாக டீ மற்றும் காபி விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது



  • Aug 31, 2025 14:11 IST

    சசிகாந்த் செந்திலை சந்தித்து நலம் விசாரித்தார் பூவை ஜெகன்மூர்த்தி

    தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு எதிராக 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலை சந்தித்து புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி நலம் விசாரித்தார். சசிகாந்த் செந்தில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார் 



  • Aug 31, 2025 13:49 IST

    வீடு வீடாகச் சென்று த.வெ.க உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவு

    வீடு வீடாகச் சென்று த.வெ.க உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மக்களின் பிரச்னைகளை நேரடியாக கேட்டு த.வெ.க தலைமையகத்திற்கு லிஸ்ட் அனுப்ப வேண்டும்; தொகுதி ரீதியாக இருக்கக்கூடிய அனைத்து பிரச்களையும் கேட்டறிந்து அறிக்கை தயார் செய்ய வேண்டும் என த.வெ.க தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.



  • Aug 31, 2025 13:31 IST

    ஜெர்மனி சென்றடைந்த மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு 

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.08.2025) ஜெர்மனி சென்றடைந்தார். அவருக்கு அங்கே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது “இங்குள்ள எனது தமிழ் குடும்பத்தின் பாசத்தால் அரவணைக்கப்பட்டு, தமிழகத்தின் பலத்தை பறைசாற்றவும், முதலீடுகளை ஈர்க்கவும், ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக கூட்டாண்மைகளை உருவாக்கவும் நான் பெருமையுடன் முன்னேறிச் செல்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Aug 31, 2025 13:02 IST

    தமிழ்நாட்டின் பொறுப்பு டி.ஜி.பி-யாக வெங்கட்ராமன் நியமனம்

    தமிழ்நாட்டின் பொறுப்பு டி.ஜி.பி-யாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டி.ஜி.பி-யாக தற்போது பணியாற்றிவரும் வெங்கட்ராமனுக்கு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.



  • Aug 31, 2025 12:52 IST

    வேலூரில் குப்பைபையில் கிடந்த தங்க மோதிரம்: பத்திரமாக ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

    வேலூர், ஓல்டு டவுன் பகுதியில் தூய்மைப் பணியாளர் நவீன் குப்பைகளை தரம்பிரிக்கும்போது அரை சவரன் தங்க மோதிரம் கிடைத்துள்ளது. இதுகுறித்து நவீன் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே, மோதிரமானது நகையை தவறவிட்ட உஷா என்பவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.



  • Aug 31, 2025 12:25 IST

    இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் - மோடி அறிவிப்பு

    இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி அறிவித்தார்.

    கொரோனா பெருந்தொற்று, எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இரு நாடுகளும் பத்திரிகையாளர்களை பரஸ்பரம் தங்களது நாடுகளில் தங்கி செய்தி சேகரிக்க அனுமதிக்கும் எனவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.



  • Aug 31, 2025 12:22 IST

    சென்னை மணலியில் மேக வெடிப்பு - வானிலை மையம்

    சென்னை மணலியில் நேற்று (30.08.2025) இரவு 10-11 மணிக்கு இடையே மேக வெடிப்பு காரணமாக மணலியில் 27 செ.மீ. மழை பொழிவு பதிவானது. மணலி நியூ டவுன் 25 செ.மீ., விம்கோ நகர் 22 செ.மீ., மழை பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Aug 31, 2025 12:00 IST

    25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளரை நியமனம்- தவெக

    தமிழக வெற்றிக் கழகம், 25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளரை நியமிக்க முடிவு செய்து, அதற்கான உத்தரவை மாவட்டச் செயலாளர்களுக்குப் பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு ஒன்றிய செயலாளர் என்ற நிலை இருந்துவந்த நிலையில், தற்போது தொகுதி வாக்குச்சாவடி அடிப்படையில் ஒன்றிய செயலாளர் பதவியைப் பிரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஒன்றிய செயலாளர்களை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • Aug 31, 2025 11:48 IST

    அன்புமணி விமர்சனம்

    சிறப்பாகச் செயல்படும் முதலமைச்சர்கள் பட்டியலில் ஸ்டாலின் இடம் பெறவில்லை. பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் 29.9% மக்களின் ஆதரவுடன் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால் ஸ்டாலின் அவரை விடக் குறைவான ஆதரவையே பெற்றுள்ளார். முன்னதாக 57% மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த ஸ்டாலின், தற்போது முதல் 10 இடங்களில் வர முடியாத அளவுக்கு தனது செல்வாக்கை இழந்துவிட்டதாகவும், அவரது தலைமையிலான அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்



  • Aug 31, 2025 11:42 IST

    சென்னையில் அதி கனமழை பதிவு

    சென்னையில் அதி கனமழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, மணலி புதுநகரில் 26 செ.மீ. மற்றும் விம்கோ நகரில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.



  • Aug 31, 2025 11:41 IST

    பிள்ளையார் சிலை கரைக்கும் நிகழ்வு தொடக்கம்

    கடலில் பிள்ளையார் சிலை கரைக்கும் நிகழ்வு. சென்னை பட்டினப்பாக்கம், திருவான்மியூர், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய நான்கு இடங்களில் பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.



  • Aug 31, 2025 11:37 IST

    இந்திய - சீன எல்லையில் அமைதியான சூழல்: பிரதமர் மோடி

    இந்திய - சீன எல்லையில் சண்டை நிறுத்தத்திற்குப் பிறகு அமைதியான சூழல் உருவாகியுள்ளது. இதன் விளைவாக, இந்தியா மற்றும் சீனா இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளது. மேலும், கைலாஷ் - மானசரோவர் யாத்திரையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டை தலைமையேற்று நடத்தும் சீனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Aug 31, 2025 11:01 IST

    இன்று நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

    தமிழ்நாட்டில் இன்று (ஆக.31) நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.


    ரூ.5 முதல் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்து உள்ளனர். மதுரை - கார், வேன், ஜீப் உள்ளிட்டவற்றுக்கு ரூ.5 கூடுதலாக கட்டணம் நிர்ணயம்; பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஒருமுறைக்கு ரூ.5-ம், இருமுறைக்கு ரூ.10-ம் அதிகரிப்பு; ஃபாஸ்ட்டேக் இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் 2 மடங்கு வசூலிக்கப்படும்



  • Aug 31, 2025 11:00 IST

    ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாநாடு ஒத்திவைப்பு

    கடந்த மாதம் ஜூலை 14ஆம் தேதி என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ், மாநாடு குறித்து தெரிவித்திருந்தார்; ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது; அதற்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது



  • Aug 31, 2025 11:00 IST

    தமிழ்நாடு ரூ.34,642 கோடி இழப்பை சந்திக்கும்

    அமெரிக்காவின் 50% வரி விதிப்பால், 2025-26 நிதியாண்டில் தமிழ்நாடு ரூ.34,642 கோடி இழப்பை சந்திக்கும் என தமிழ்நாடு அரசு(GUIDANCE TAMILNADU) கணக்கிட்டுள்ளது. குறிப்பாக ஆயத்த ஆடைத் துறையில் ரூ.14,280 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்பு என தெரிவித்துள்ளது.



  • Aug 31, 2025 10:56 IST

    தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை மறுநாள் தமிழகம் வருகிறார்.  செப். 2ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கி 120ஆவது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ளார்



  • Aug 31, 2025 10:54 IST

    இந்தியா சாதனை..!

    கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், இதுவரை இல்லாத அளவுக்கு 99 பதக்கங்களை குவித்து இந்தியா அபார சாதனை  செய்தது. 50 தங்க‌ம், 26 வெள்ளி, 23 வெண்கலத்துடன், பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 



  • Aug 31, 2025 10:26 IST

    மதுரவாயல் நொளம்பூர் தரைப்பாலம் மூழ்கியது

    கனமழையால் சென்னை மதுரவாயல் நொளம்பூர் கூவம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளநீர் செல்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரவாயல் போலீசார் தரைப்பாலத்தில் தடுப்புகள் அமைத்துள்ளனர்; தடுப்புகளை மீறி ஆபத்தை உணராமல் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதால் அச்சம் நிலவுகிறது. 



  • Aug 31, 2025 10:26 IST

    பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் இடையே நடந்தது.



  • Aug 31, 2025 10:02 IST

    சென்னையில் 30 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பத்திரமாக மீட்பு

    சென்னையில் 30 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.  மீட்கப்பட்ட சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



  • Aug 31, 2025 09:19 IST

    அமெரிக்க பொருட்களுக்கு எதிராக அதிகரிக்கும் பரப்புரை

     இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 விழுக்காடு அளவுக்கு அதீத வரிவிதித்துள்ளதால், அமெரிக்க பொருட்களுக்கு எதிராக அதிகரிக்கும் பரப்புரை. பெப்சி, கொக்கோ-கோலா, சப்வே- கே.எஃப்சி, மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவன பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்குமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 



  • Aug 31, 2025 08:38 IST

    சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு - பாதுகாப்பு பணியில் 16,000 போலீசார்

    சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 1519 விநாயகர் சிலைகள் இன்று கடற்கரையில் கரைக்கப்படுகின்றன. சுமார் 16,000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டினப்பாக்கம், நீலாங்கரை, புது வண்ணாரப்பேட்டை மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



  • Aug 31, 2025 08:34 IST

    மேட்டூர் அணை நிலவரம்

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9828 கன அடியில் இருந்து 16,493 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118.66 அடியாகவும், நீர் இருப்பு 91.350 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்கு மற்றும் கால்வாய் வழியே 15,800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.



  • Aug 31, 2025 08:32 IST

    சென்னையில் விமான சேவை பாதிப்பு

    சென்னையில் நள்ளிரவு பெய்த கனமழையால் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 4 விமானங்கள் பெங்களூரு திரும்பியது. சென்னையில் தரையிறங்க வந்த 8 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் கோலாலம்பூர், இலங்கை, துபாய், குவைத், ஹாங்காங், பிராங்பார்ட் நகரங்களுக்கான விமான சேவை தாம‌தமானது.



  • Aug 31, 2025 08:31 IST

    17 மாவட்டங்களில் மழை தொடரும்

    திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தி.மலையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.  விழுப்புரம், நீலகிரி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், விருதுநகரில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Aug 31, 2025 07:42 IST

    எம்.பி சசிகாந்த் செந்திலுக்கு தீவிர சிகிச்சை

    தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வித் தொகையை வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எம்பி சசிகாந்த் செந்திலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Aug 31, 2025 07:41 IST

    போருக்கு நடுவே மோடி - ஜெலென்ஸ்கி பேச்சு

    அதிபர் ஜெலென்ஸ்கியுடன் உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து, பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். இந்தியா - உக்ரைன் இருதரப்பு கூட்டாண்மையை ஆழப்படுத்தும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.



  • Aug 31, 2025 07:41 IST

    பாஜகவினருக்கு மிட்டாய் கொடுத்த ராகுல்

    பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறி கருப்பு சட்டை அணிந்தபடி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கருப்பு கொடி காட்டிய இளைஞர்களை அழைத்து  ராகுல் காந்தி மிட்டாய்கள் வழங்கினார்.



  • Aug 31, 2025 07:37 IST

    ஜெர்மனியில் தமிழர்கள் அன்புடன் வரவேற்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    ஜெர்மனியில் உள்ள எனது தமிழ் குடும்பத்தினர் என்னை பாசத்துடன் வரவேற்றனர். தமிழ்நாட்டின் சாதகமான அம்சங்களை வெளிப்படுத்தி முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி வந்திருக்கிறேன். முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்த பெருமையுடன் வந்திருக்கிறேன். ஜெர்மனியில் தமிழ் குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றதாக ஸ்டாலின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.



  • Aug 31, 2025 07:34 IST

    “சென்னையில் மேகவெடிப்பு’’

    சென்னையில் இந்தாண்டில் முதல் முறையாக மேகவெடிப்பு ஏற்பட்டதாக சுயாதீனா வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. 



news updates Tamilnadu News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: